

நாமக்கல் மல்லசமுத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் போலி நகை அடமானம் வைத்து கடன் பெற்ற விவகாரம் தொடர்பாக அலுவலர்கள் 3 பேரை கூட்டுறவு சங்க துணைப்பதிவாளர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
திருச்செங்கோடு அருகே மல்லசமுத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 5 பவுனுக்கு உட்பட்ட தள்ளுபடி கடனுக்கு தேர்வு செய்யப்பட்ட நகைகள் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது கடந்த ஆண்டு ஜுலை மாதம் பீமரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரால் அடகு வைக்கப்பட்ட 2 வளையல்கள் மாற்று குறைந்த நகை என்பது தெரியவந்தது.
இதுபோல் 14 கணக்குகளில் மாற்று குறைந்த தங்க நகைகளுக்கு ரூ.15 லட்சம் வரை பணம் கொடுத்திருப்பது ஆய்வுகளில் தெரியவந்தது. இதையடுத்து நாமக்கல் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செல்வகுமார் உத்தரவின்பேரில் துணைப்பதிவாளர் வெங்கடாசலம் கூட்டுறவு கடன் சங்கத்தில் எழுத்தர்களாக பணியாற்றி வந்த சலோன்மணி, சிவலிங்கம், சுந்தரராஜ் ஆகிய 3 பேரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த மோசடி தொடர்பாக தொடர் விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சங்கத்தின் தலைவரும், மல்லசமுத்திரம் பேரூர் அதிமுக செயலாளருமான சுந்தரராஜன் தனது தலைவர் பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். இது கூட்டுறவு கடன் சங்க அலுவலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.