

சேலம் மாவட்ட மைய நூலகத்தில் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டோர், அரசுப் பணிகளில் பெண்களுக்கு கூடுதல் சிறப்பு இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரி சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர்.
மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் அரசுப் பணிகளுக்கு சமூக இட ஒதுக்கீடு, சிறப்பு இட ஒதுக்கீடு என இரு ஒதுக்கீடுகளில் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். சிறப்பு ஒதுக்கீட்டில் பெண்களுக்கு 30 சதவீதமும், தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு 20 சதவீதமும், முன்னாள் ராணுவத்தினருக்கு 5 சதவீதமும், மாற்றுத் திறனாளிகளுக்கு 4 சதவீதமும், விளையாட்டு சாதனையாளர்களுக்கு 2 சதவீதமும் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, இறுதியாக தேர்வர்களை தேர்வு செய்யும்போது, சிறப்பு ஒதுக்கீடுகளான பெண்கள் மற்றும் தமிழ் வழியில் பயின்றதற்கான இட ஒதுக்கீடுகளை, பக்கவாட்டு முறையில் முறையில் நிரப்ப வழிகாட்டியுள்ளது.
இது தொடர்பாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் விசாரித்தபோது, இன்னும் விதிமுறைகள் மாற்றப்படவில்லை என்று பதிலளித்தனர். இதனால், 2013-ம் ஆண்டு முதல் குறிப்பாக ஆண் தேர்வர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் விதிமுறைகளை மாற்றி, பக்கவாட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்.
மேலும், ஏற்கெனவே உள்ள இட ஒதுக்கீட்டின்படி, பெண்கள் 60 சதவீதம் இடங்களை பெற்று வருகின்றனர். இந்நிலையில், பெண்களுக்கான சிறப்பு இட ஒதுக்கீட்டை 40 சதவீதமாக உயர்த்தும்போது, பெண்கள் 75 சதவீதம் முதல் 80 சதவீதம் இடங்களைப் பெறக்கூடும். இதனால், அரசுப் பணிகளை ஆண்கள் பெறுவது, மிகவும் அரிதாகிவிடும்.
அரசுப் பணிகளுக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் ஆண்களின் எதிர்காலம் முற்றிலும் பாதிக்கப்படும் என்பதால், பெண்களுக்கான இட ஒதுக்கீடு வழங்கும் முறையைப் பரிசீலித்து, ஆண்கள் பாதிக்காத வகையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.