

திருச்சி: திருச்சி தெற்கு மாவட்ட மதிமுக மற்றும் சமயபுரம் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் அண்ணா பிறந்த நாளையொட்டி மணப்பாறையில் இலவச பொது மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது.
மருத்துவர் பெ.கலையரசன் தலைமை வகித்தார். மதிமுக தெற்கு மாவட்டச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் முன்னிலை வகித்தார். எம்எல்ஏ ப.அப்துல் சமது முகாமை தொடங்கி வைத்துப் பேசியது: மணப்பாறையில் அரசு கலை அறிவியல் கல்லூரி தொடங்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் நானும் வலியுறுத்தியுள்ளேன். அடுத்த ஆண்டு மணப்பாறையில் நிச்சயம் அரசு கலை அறிவியல் கல்லூரி அமைக்கப்படும் என்றார்.
முகாமில் 300-க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு 80 பேர் தொடர் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.
நிகழ்ச்சியில், மணப்பாறை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் அமிர்தவள்ளி ராமசாமி, மதிமுக மாநில விவசாய அணி துணைச் செயலாளர் துரைராஜ், நகரச் செயலாளர் எம்.கே.முத்துப்பாண்டி, திமுக நகரச் செயலாளர் கீதா மைக்கேல்ராஜ், மமக மாவட்டச் செயலாளர் பையாஸ் உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர்.