Published : 18 Sep 2021 03:13 AM
Last Updated : 18 Sep 2021 03:13 AM

சேலம் மாவட்டத்தில் 30-ம் தேதி வரை - வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் :

சேலம் மாவட்டத்தில் வரும் 30-ம் தேதி வரை வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இதுதொடர்பாக ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

இந்தியாவில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பில் 10 சதவீதம் வயிற்றுப்போக்கினால் ஏற்படுகிறது. ஆண்டுக்கு சுமார் ஒரு லட்சம் குழந்தைகள் வயிற்றுப்போக்கினால் இறக்கின்றனர்.

சீம்பால் புகட்டப்படாத குழந்தைகள், சுகாதாரமற்ற குழந்தை வளர்ப்பு முறைகள், தாய்மார்கள் கைசுத்தம் பேணாமல் இருத்தல், சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு இல்லாமை, பாதுகாப்பான குடிநீர் பற்றிய விழிப்புணர்வு இல்லாமை போன்ற காரணங்களால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு குழந்தைகள் இறக்க நேரிடுகிறது.

இதை தடுக்க தேசிய அளவில் ஒவ்வொரு ஆண்டும் தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் இரு வாரங்கள் அனுசரிக்கப்படுகிறது.

சேலம் மாவட்டத்தில் வரும் 30-ம் தேதி வரை கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் 5 வயது குழந்தைகள் வசிக்கும் வீடுகளுக்கு சென்று உப்புநீர் கரைசல் தூள் பாக்கெட்டுகளை இலவசமாக வழங்கி, வயிற்றுப்போக்கின் போது இதனை உட்கொள்வதை பழக்கப்படுத்துதல், வயிற்றுப்போக்கு மற்றும் அதன் சிகிச்சை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவர்.

மேலும், சேலம் மாவட்டத்தில் உள்ள 107 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 502 துணை சுகாதார நிலையங்கள், 13 அரசு மருத்துவமனைகள் மற்றும் 2,709 அங்கன்வாடி மையங்களில் இம்முகாம் நிறுவப்பட்டுள்ளது.

இதன் மூலம் சேலம் மாவட்டத்தில் 3,23,382 குழந்தை கள் பயன்பெற உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x