ஏரியூர் அருகே ஓராண்டுக்கு மேலாக - இருட்டில் வாழும் 30 குடும்பங்கள் :
சிவகங்கை மாவட்டம், ஏரியூர் அருகே ஓராண்டுக்கு மேலாக 30 குடும்பங்கள் இருட்டில் அச்சத் துடன் வாழ்ந்து வருகின்றனர்.
சிங்கம்புணரியில் 20 ஆண்டு களுக்கும் மேலாக சர்க்கஸ் தொழி லாளர்கள் வசித்து வந்தனர். அங்கு இடநெருக்கடியால் ஓராண்டுக்கு முன்பு, ஏரியூர் அருகே எம்.வலையாபட்டி அம்மன் நகரில் குடியேறினர். தற்போது அப்பகுதியில் 30 குடும்பங்களைச் சேரந்த 80-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அங்கு குடிநீர் வசதி இல்லை. இதனால் அவர்கள் 3 கி.மீ. நடந்து சென்று பக்கத்து கிராமங்களில் குடிநீர் எடுத்து வருகின்றனர். அவர்கள் வசிக்கும் பகுதியில் மின்சார வசதி இல்லை. இதனால் ஓராண்டுக்கும் மேலாக இருட்டில் வாழ்கின்றனர். இரவு நேரங்களில் பாம்புகள் தொல்லை அதிமாக உள்ளது. இதனால் அவர்கள் அச்சத்துடன் வசிக்கின்றனர்.
இது தொடர்பாக சர்க்கஸ் தொழிலாளர்கள் சுரேஷ், ரமேஷ் கூறியதாவது: இங்கு எந்த அடிப்படை வசதியும் இல்லை. மழை நேரங்களில் எங்கள் பகுதிக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது என்றனர்.
இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘மாவட்ட ஆட்சியர் உத்தரவில் அவர்களுக்கு மனையிடம் வழங்கியுள்ளோம். விரைவில் வீடு கட்டி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். அப்போது மின்வசதியும் செய்து தரப்படும்’ என்றனர்.
