Last Updated : 06 Sep, 2021 03:16 AM

 

Published : 06 Sep 2021 03:16 AM
Last Updated : 06 Sep 2021 03:16 AM

கரோனா ஊரடங்கால் முடங்கிப்போன வெற்றிலை வர்த்தகம் : சாகுபடி பரப்பளவு குறைந்தது, அரசு உதவ விவசாயிகள் கோரிக்கை

கரோனா ஊரடங்கால் வெற்றிலை வர்த்தகம் முடங்கிப்போனதால் நாமக்கல் மாவட்டத்தில் சாகுபடி பரப்பளவு குறைந்து விட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், பொத்தனூர், மோகனூர் மற்றும் சுற்றுவட்டாரங்களில் காவிரி ஆற்றை பாசன ஆதாரமாகக் கொண்டு நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் வெற்றிலை சாகுபடி செய்யப்படுகிறது. வெள்ளைக்கொடி, கற்பூரவள்ளி என இரு ரக வெற்றிலை உற்பத்தி செய்யப்படுகிறது.

இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப்பிரதேசம் போன்ற வெளிமாநிலங்களுக்கும் வெற்றிலை விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக வெளி மாநில ஆர்டர் குறைந்துவிட்டதாக வெற்றிலை விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

மேலும், விவசாய தொழிலாளர்கள் பற்றாக்குறை, நுகர்வு சரிவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வெற்றிலை சாகுபடி பரப்பளவு குறைந்து கொண்டே வருவதாக விவசாயிகள் தெரிவித்தனர். இதுகுறித்து பொத்தனூரைச் சேர்ந்த வெற்றிலை விவசாயி பி. நல்லேந்திரன் கூறியதாவது:

ஒரு ஏக்கர் வெற்றிலை சாகுபடி செய்ய ரூ.9 லட்சம் வரை செலவு ஆகும். இரண்டு ஆண்டுகள் வரை மகசூல் பார்க்க முடியும். கரோனா ஊரடங்கிற்கு முன்னர் பொத்தனூர் பகுதியிலிருந்து நாள்தோறும் 600 பண்டல்கள் வீதம் வெளிமாநிலங்களுக்கு வெற்றிலை அனுப்பப்படும். ஒரு பண்டல் ரூ.1200 முதல் ரூ.1600 வரை விற்பனையாகும். கரோனா ஊரடங்கு காரணமாக வெற்றிலை வர்த்தகம் முற்றிலுமாக முடங்கியுள்ளது. அதேவேளையில் வெற்றிலைக்கு அரசின் திட்டங்கள் எதுவும் கிடையாது. நுகர்வும் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் வெற்றிலை சாகுபடி செய்யும் பரப்பளவும் குறைந்து வருகிறது. வெற்றிலை மருத்துவ குணம் கொண்டது. இதன் உற்பத்தியை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், கடந்த 2016-17-ம் ஆண்டு நாமக்கல் மாவட்டத்தில் 305 ஹெக்டேர் பரப்பளவில் வெற்றிலை சாகுபடி செய்யப்பட்டது. 2017-18-ல் 285 ஹெக்டேரும், 2018-19-ம் ஆண்டு 300 ஹெக்டேரும், 2019-2020-ல் 249 ஹெக்டேரும் வெற்றிலை சாகுபடி செய்யப்படுகிறது. வெற்றிலை சாகுபடிக்கு தோட்டக்கலைத் துறை மூலம் எவ்வித திட்டங்களும் செயல்படுத்தப்படுவதில்லை. தற்போது வெற்றிலை விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் விவசாயிகளுக்கு வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது. அரசாணை வந்தால் தான் எந்த அடிப்படையில் வழங்குவது என்பது தெரியவரும்.

நாமக்கல் முதலிடம்

கடந்த ஆண்டு இந்தியாவில் இருந்து மட்டும் வெளிநாடுகளுக்கு 6,159 மெட்ரிக் டன் அளவுக்கு வெற்றிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக அபீடா என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. கர்நாடகா, கேரளா, அசாம் ஆகிய மாநிலங்கள் வெற்றிலையை அதிகளவில் உற்பத்தி செய்கின்றன. தமிழக அளவில் நாமக்கல் மாவட்டம் வெற்றிலை உற்பத்தியில் முன்னிலை வகித்து வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x