சித்தூர் மாவட்டம் கலவகுண்டா அணையில் இருந்து தண்ணீர் திறப்பு - பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு : கரையோர கிராமங்களுக்கு அபாய எச்சரிக்கை

பொன்னை அணைக்கட்டை கடந்து செல்லும் வெள்ள நீரை பார்வையிட்ட பொதுமக்கள்.
பொன்னை அணைக்கட்டை கடந்து செல்லும் வெள்ள நீரை பார்வையிட்ட பொதுமக்கள்.
Updated on
1 min read

ஆந்திர மாநிலம் கலவகுண்டா அணையில் இருந்து 4,300 கன அடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் பொன்னை அணைக்கட்டு முழுமையாக நிரம்பி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தின் காரணமாக, வட தமிழகம் மற்றும் அதையொட்டிய ஆந்திர மாநில பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பாலாறு, மலட்டாறு, பொன்னை ஆறுகளில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் ஆற்றை நம்பியுள்ள ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

இதற்கிடையில், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்துக்கு உட்பட்ட கலவகுண்டா அணை தொடர் மழை காரணமாக முழுமையாக நிரம்பியுள்ளது. இதை யடுத்து, கலவகுண்டா ஆணையில் இருந்து சுமார் 4 ஆயிரத்து 300 கன அடி வீதம் தண்ணீர் நேற்று திறக்கப்பட்டுள்ளது. இதனால், பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

அதன்படி, வேலூர் மாவட்ட எல்லையில் உள்ள பொன்னை தடுப்பணையில் வெள்ள நீர் ஆர்ப்பரித்து கடந்து சென்றது. மேலும், பொன்னை ஆற்றின் கரையோரம் உள்ள முப்பதுக்கும் மேற்பட்ட ஏரிகள் வேகமாக நிரம்பத் தொடங்கியுள்ளன.

கடந்த ஆண்டு பெய்த கனமழைக்குப் பிறகு தற்போதுதான் பொன்னை அணைக்கட்டு தடுப்பணையில் இருந்து வெள்ள நீர் முழுமையாக வெளியேறி ஆற்றின் இரு கரைகளை தொட்டபடி ஆர்ப்பரித்து செல்வதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்துச் சென்றனர்.

பொன்னை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக கரையோர கிராமங்களில் வருவாய்த் துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். இரவு நேரங்களில் ஆற்றுப் பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாம் என பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

மழையளவு விவரம்

அரக்கோணத்தில் 14.6, ஆற்காட்டில் 12.1, வாலாஜாவில் 11.8, அம்மூரில் 6.2, சோளிங்கரில் 8.2, கலவையில் 13.2 மி.மீ மழை பதிவாகி யுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in