

வீராணம் அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் இளைஞர் உயிரிழந்தார். மேலும், இருவர் காயம் அடைந்தனர்.
வீராணம் அடுத்த மன்னார்பாளையம் பிரிவு பகுதியைச் சேர்ந்தவர் வேலு (35). இவரது தம்பி சுரேஷ் (34). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் சித்தர்கோயில் அருகேயுள்ள அவர்களது நிலத்துக்கு இருசக்கரவாகனத்தில் சென்றனர்.
பின்னர் இரவு வீட்டுக்கு வந்துகொண்டிருந்தனர். செம்மண்திட்டு என்ற இடத்தில் வந்தபோது, அவ்வழியாக வந்த வேன் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில், சுரேஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மேலும், வேலு மற்றும் நாழிக்கல்பட்டியைச் சேர்ந்த வேன் ஓட்டுநர் வெங்கடாஜலம் (45) ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்தனர்.
இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுதொடர்பாக இரும்பாலை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.