மலைக் கிராம பெண்களிடமிருந்து - துணை செவிலியர் பயிற்சிக்கு விண்ணப்பம் வரவேற்பு :

மலைக் கிராம பெண்களிடமிருந்து -  துணை செவிலியர் பயிற்சிக்கு விண்ணப்பம் வரவேற்பு  :
Updated on
1 min read

சேலம் மாவட்டத்தில் உள்ள மலைக்கிராம பெண்களிடமிருந்து செவிலியர் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இதுதொடர்பாக சேலம் ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சேலம் மாவட்டத்தில் காடையாம்பட்டி வட்டாரத்தில் பூமரத்தூர், கொளத்தூர் வட்டாரத்தில் பாலமலை, பனமரத்துப்பட்டி வட்டாரத்தில் கம்மாளப்பட்டி, கோணமடுவு, கூட்டாறு, அயோத்தியாப்பட்டணம் வட்டாரத்தில் ஆலடிப்பட்டி, கெங்கவல்லி வட்டாரத்தில் கூடமலை, 74-கிருஷ்ணாபுரம், நரிப்பாடி, வாழக்கோம்பை, உலிபுரம்புதூர், மண்மலை செங்காடு, பெரியபக்களம், ஓடைக்காட்டுபுதூர், பெத்தநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் கருமந்துறை, தேக்கம்பட்டு, மணியார்குண்டம், பகுடுப்பட்டு, கரியகோயில், குன்னூர், சூலாங்குறிச்சி, தாள்வள்ளம், ஏற்காடு வட்டாரத்தில் மாரமங்கலம், கொட்டச்சேடு, தழைச்சோலை, கோயில்மேடு, ஜெரினாக்காடு, நாகலூர், மஞ்சக்குட்டை, கொலகூர், செம்மநத்தம், பிளியூர், பட்டிபாடிவேலூர் ஆகிய மலைப் பகுதிகளில் வாழும் மலைவாழ் மக்களுக்கு சுகாதாரம் மற்றும் மருத்துவ சேவைகள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, இந்த மலைப்பகுதிகள் அல்லது அதன் குக்கிராமங்களில் வசிக்கும் பெண்களிடம் இருந்து துணை செவிலியர் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பங்கள் விண்ணப்பதாரர்களால் சொந்த கையெழுத்தில் பூர்த்தி செய்யப்பட வேண்டும். 31.12.2021 அன்று 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். 35 வயதுக்குள் இருக்க வேண்டும் (1.1.1987=க்குப் பின்னர் பிறந்தவராக இருக்க வேண்டும்). அங்கன்வாடி பணியாளராக இருப்பின் 1.1.1980-க்கு பின்னர் பிறந்தவராக இருக்க வேண்டும். 42 வயதுக்கு மிகைப்படக் கூடாது.

தமிழ்மொழியினை ஒரு பாடமாக கொண்டு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மலைப்பகுதிகளில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் பணிபுரியும் முதன்மை அங்கன்வாடி பணியாளர்களாக இருப்பின் குறைந்தது 2ஆண்டு பணிபுரிந்திருக்க வேண்டும். மலைப்பகுதியில் உள்ள துணை சுகாதார நிலையங்கள் உள்ளடக்கிய மலைப்பகுதியில் வசிப்பதற்கான இருப்பிடச்சான்றிதழ் நகல் ஒன்றினை அளித்து, சேலம் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அலுவலகத்தில் கட்டணமின்றி பயிற்சிக்கான விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், கல்வித் தகுதி மதிப்பெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் மற்றும் சான்றொப்பம் செய்யப்பட்ட இதர சான்றிதழ் நகல்களுடன் அனுப்ப வேண்டும். துணை செவிலியர் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் பயிற்சி முடிந்தவுடன், மலைப்பகுதிகளில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் கட்டாயம் பணிபுரிய வேண்டும். விண்ணப்ப உறையின் மீது 2 ஆண்டு பல்நோக்கு சுகாதார (பெண்) பணியாளர் பயிற்சி என்று எழுதப்பட வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் துணை இயக்குநர், சுகாதாரப் பணிகள், பழைய நாட்டாண்மை கழக கட்டட வளாகம், சேலம் 636 001 என்ற முகவரிக்கு வரும் 15-ம் தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்கும் வகையில் பதிவு அஞ்சலில் அனுப்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in