

திருப்பத்தூர் நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளன. நகராட்சிக்கு உட்பட்ட 5 இடங்களில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 36 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைக்கழிவு தரம் பிரிக்கப்பட்டு, உரமாக மாற்றும் பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில், நகராட்சியில் நடைபெற்று வரும் திடக்கழிவு மேலாண்மை பணிகள், சாலைகளின் தரம் மற்றும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து நகராட்சிகளின் நிர்வாக இயக்குநரகத்தின் கண்காணிப்பு பொறியாளர் பாண்டுரங்கன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, ப.உ.ச. நகரில் உள்ள குப்பைக்கழிவு தரம் பிரிப்பு பணிகள் மற்றும் நகரின் சாலைகளின் நிலை குறித்து அவர் ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து, நகராட்சி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், கண்காணிப்பு பொறியாளர் பாண்டுரங்கன் பேசும்போது, “திருப்பத்தூர் நகராட்சியை தூய்மையுடன் பராமரிக்க வேண்டும். நகராட் சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைக்கழிவுகளை சாலையில் யாராவது கொட்டினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை திறம்பட கையாள வேண்டும்.
ஏற்கெனவே தொடங்கப்பட்ட சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். பாதாள சாக்கடை திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்’’ என்றார்.
இந்த ஆய்வின் போது நகராட்சி ஆணையாளர் ஏகராஜ், பொறியாளர் உமாமகேஸ்வரி, சுகாதார அலுவலர் ராஜரத்தினம், சுகாதார ஆய்வாளர்கள் விவேக், குமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.