பெண்ணின் புகைப்படத்தை முகநூலில் தவறாக சித்தரித்து பதிவிட்ட நபர் கைது :

பெண்ணின் புகைப்படத்தை முகநூலில் தவறாக சித்தரித்து பதிவிட்ட நபர் கைது :
Updated on
1 min read

தஞ்சாவூர் மாவட்டம் நாஞ்சிகோட்டை சாலையை அடுத்த மறியல் பகுதியைச் சேர்ந்தவர் இல.அறிவுடைநம்பி(41). இவர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தஞ்சாவூர் தொகுதி செயலாளராக இருந்தார். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில், முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாகக் கூறி, கடலூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை திருமணம் செய்ய கடந்த மார்ச் மாதம் நிச்சயம் செய்துள்ளார். கடந்த மே மாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில், அறிவுடைநம்பிக்கு ஏற்கெனவே திருமணமானதும், பல பெண்களுடன் தொடர்பு இருப்பதையும் அறிந்த கடலூர் இளம்பெண், உடனடியாக திருமணத்தை நிறுத்தியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அறிவுடைநம்பி, அப்பெண்ணுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து, முகநூலில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அறிந்த பாதிக்கப்பட்ட இளம்பெண் கடந்த ஜூலை மாதம் போலீஸில் புகார் அளித்திருந்தார். அதன்பேரில், போலீஸார் வழக்கு பதிவுசெய்து அறிவுடைநம்பியை தேடி வந்தனர். இதற்கிடையே புகார் அளித்த பெண்ணை, அறிவுடைநம்பி செல்போனில் மிரட்டி வந்துள்ளார். இதுகுறித்தும் அந்த இளம்பெண் போலீஸில் புகார் அளித்தார்.

இதையடுத்து, தஞ்சாவூர் எஸ்.பி ரவளிப்ரியாகாந்தபுனேனி உத்தரவின்பேரில், வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கலைவாணி தலைமையிலான போலீஸார் சென்னையில் தனியார் விடுதியில் தங்கியிருந்த அறிவுடைநம்பியை நேற்று முன்தினம் கைது செய்தனர். அறிவுடைநம்பி சில நாட்களுக்கு முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in