பூண்டிமாதா பேராலயத்தில் - மாதா பிறப்பு பெருவிழா கொடியேற்றம் :
தஞ்சாவூர் மாவட்டம் பூண்டிமாதா பேராலயத்தில் ‘மாதா பிறப்பு பெருவிழா' நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பூண்டிமாதா பேராலயம் இந்தியாவில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்துவ பசிலிக்காக்களில் ஒன்றாகும். இங்கு ஆண்டுதோறும் புனித அன்னை மரியாளின் பிறப்பு பெருவிழா ஆக.30-ம் தேதி முதல் செப்.9-ம் தேதி வரை நடைபெறும். இந்த ஆண்டு ‘மாதா பிறப்பு பெருவிழா' நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக, மாதாவின் படம் வரையப்பட்ட வண்ணக் கொடியுடன் பங்கு தந்தையர் ஊர்வலமாக வந்து பேராலயத்தின் முன்பாக உள்ள கொடிமரத்தை அடைந்தனர்.
பின்னர், பேராலய அதிபர் பாக்கியசாமி கொடியை புனிதப்படுத்தி கொடிமரத்தில் ஏற்றினார். இதில், துணை அதிபர் ரூபன், பூண்டி மாதா தியான மைய இயக்குநர் சாம்சங், உதவித் தந்தைகள் யுனிகோ, ஜான்சன், அருளானந்தம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
திருவையாறு டிஎஸ்பி ராஜ்மோகன் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கரோனா பரவல் காரணமாக கொடியேற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இன்று (ஆக.31) முதல் 7-ம் தேதி வரை நவநாட்கள் திருப்பலிகள் நடைபெறும். செப்.8-ம் தேதி மாலை மற்றும் 9-ம் தேதி காலை குடந்தை மறைமாவட்ட ஆயர் அந்தோனிசாமி தலைமையில் திருவிழா, கூட்டுத் திருப்பலி நடைபெறும்.
