Published : 28 Aug 2021 03:16 AM
Last Updated : 28 Aug 2021 03:16 AM

வலம்புரி சங்கு என கூறி ரூ.2 கோடிக்கு விற்க முயற்சி - தி.மலை கிரிவல பாதையில் 7 பேர் கும்பல் கைது : காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ரூ.2 கோடிக்கு வலம்புரி சங்கை விற்பனை செய்ய முயன்ற 7 பேர் கொண்ட மோசடி கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், தலைவமறைவாக உள்ள ஒருவரை தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள நித்தியானந்தா ஆசிரமம் அருகே உள்ள சாய்பாபா கோயிலில் ‘அதிர்ஷ்ட வலம்புரி சங்கு’ என கூறிக்கொண்டு மோசடி கும்பல் இருப்பதாக நேற்று முன் தினம் காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், திருவண்ணாமலை கிராமிய காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று 7 பேர் கொண்ட கும்பலை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், திருவண்ணா மலை வஉசி நகர் 9-வது தெருவில் வசிக்கும் கோவிந்தராஜ்(53), பே கோபுரத் தெருவில் வசிக்கும் அஸ்வத்தாமன்(28), வேட்டவலம் நகரம் விழுப்புரம் சாலையில் வசிக்கும் உமாசங்கர்(38), விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஜெயகொண்டம் கிராமம் மாரியம்மன் கோயில் தெருவில் வசிக்கும் குப்பன் என்கிற அரசு(50), ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் வசிக்கும் சதீஷ்(25), புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பத்தில் வசிக்கும் ராம்குமார்(32), தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அடுத்த ரங்கராம்பட்டி கிராமத்தில் வசிக்கும் நாகராஜ்(41) ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள், ‘வாழ்வில் வளம் கொழிக்கும் வலம்புரி சங்கு’ எனக் கூறி, தண்டராம்பட்டு அடுத்த வேப்பூர் செக்கடி கிராமத்தில் வசிக்கும் பரணி(46) என்பவரிடம் 2 கோடி ரூபாய் அளவுக்கு பேரம் பேசி விற்பனை செய்ய முயன்றது தெரியவந்துள்ளது. இதன் பின்னணியில், கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த ராம் செயல்பட்டுள்ளார். இது குறித்து திருவண்ணாமலை கிராமிய காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து 7 பேரையும் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள ராமை தேடி வருகின்றனர்.

இது குறித்து காவல்துறையினர் கூறும்போது, “திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் இடைகாடர் சித்தர் ஆசிரமம் நடத்தி வருபவர் கோவிந்தராஜ். தன்னை, சித்தர் என கூறிக் கொண்டவர். இவர், போலி சித்தர் எனக் கூறி, அவர் நடத்தி வந்த ஆசிரமத்துக்கு தி.மலை மாவட்ட நீதிபதியாக பணியாற்றிய மகிழேந்தி, ‘சீல்’ வைத்து நடவடிக்கை மேற்கொண்டார். போலி சித்தர் கோவிந்தராஜ் மற்றும் பண்ருட்டியில் வசிக்கும் ராம் ஆகியோர் கூட்டாளிகள். இவர்களது தலைமையில் மோசடி கும்பல் செயல்பட்டுள்ளது.

இறைவன் பெயரை கூறிக் கொண்டு, பாபா கோயில் மற்றும் ஆசிரமத்துக்கு வந்து சென்றவர்களின் மன ஓட்டத்தை கணக்கிட்டு மோசடி செய்வது வாடிக்கை. அவ்வாறு பாபா கோயிலுக்கு நேற்று முன் தினம் வந்த பரணியை மூளைச்சலவை செய்து, வாழ்வில் வளம் கொழிக்கும் வலம்புரி சங்கு உள்ளதாக கூறி, அவரிடம் பணத்தை பறிக்க திட்டமிட்டுள்ளனர்.

வலம்புரி சங்கை வீட்டில் வைத்துபூஜை செய்தால் கோடீஸ்வரராகஆகிவிடலாம் என்றும், பாலை ஊற்றினால் தயிராகும் என்றும், அரிசியை வைத்தால் தங்கமாகி விடும் என கூறியுள்ளனர். ரூ.2 கோடி அளவில் பேரம் பேசியுள்ளனர். தங்களுக்கு தெரிந்தவர்கள் இருந்தால் கூறும்படியும் கேட்டுக் கொண்டனர். அவர்களது பேச்சில் சந்தேகம் எழுந்ததால், பரணி கொடுத்த தகவலின் பேரில் 7 பேரும் சிக்கினர். தலைமறைவாக உள்ள பண்ருட்டி ராமை தேடி வருகிறோம்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x