திருவாரூர் மாவட்டத்தில் - டெங்கு, தொற்று நோய் பரவலைதடுக்க தீவிர நடவடிக்கை : அதிகாரிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்

திருவாரூர் மாவட்டத்தில் -  டெங்கு, தொற்று நோய் பரவலைதடுக்க தீவிர நடவடிக்கை :  அதிகாரிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்
Updated on
1 min read

திருவாரூர் மாவட்டத்தில் டெங்கு, தொற்று நோய் பரவலைத் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு ஆட்சியர் அறிவுரை வழங்கினார்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், டெங்கு மற்றும் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த முன்னேற்பாடு கூட்டம் நேற்று நடைபெற்றது. ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் தலைமை வகித்தார். சுகாதாரத் துறை துணை இயக்குநர் ஹேமசந்த் காந்தி, உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) பழனிசாமி, சுகாதாரத் துறை இணை இயக்குநர் உமா, மாவட்ட மலேரியா தடுப்பு அலுவலர் பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் பேசியது:

தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை பரவலாக பொழிந்து வருவதால், இம்மழையின் தாக்கத்தால் டெங்கு மற்றும் இதர தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, திருவாரூர் மாவட்டத்தில் தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள் என அனைத்துப் பகுதிகளிலும் ஒட்டுமொத்த துப்புரவு முகாம் நடத்தி, அனைத்துவிதமான கொசு உற்பத்தி இடங்களைக் கண்டறிந்து தூய்மைப்படுத்துவதுடன், திடக்கழிவுகள் குறிப்பாக டயர்கள், பயன்படுத்தி வீசி எறியப்பட்ட கலன்கள் போன்றவற்றை அப்புறப்படுத்த வேண்டும்.

மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் வளாகங்களில் நீர் தேங்காதவண்ணம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

டெங்கு காய்ச்சல் மற்றும் நீர் மூலம் பரவும் நோய்களின் தன்மை, நோய் பரவும் முறை குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில், விழிப்புணர்வு முகாம்களை நடத்த வேண்டும். குடிநீர் மாதிரிகளை குளோரின் அளவு மற்றும் பாக்டீரியல் ஆய்வுக்கு அனுப்பி வைத்தல் வேண்டும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in