Published : 25 Aug 2021 03:18 AM
Last Updated : 25 Aug 2021 03:18 AM
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட கூத்தாண்டகுப்பம் ஊராட்சியில் பம்ப் ஆபரேட்டர் களாக பணியாற்றி வருபவர்கள், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வராசுவிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
அம்மனுவில், அவர்கள் கூறியிருப்பதாவது, "திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியின் பம்ப் ஆபரேட்டர்களாக ஒப்பந்த அடிப்படையில் சுமார் 250-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகிறோம். எங்களுக்கு மாதச் சம்பளமாக ஆரம்பத்தில் ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது. சம்பள பணத்தை உயர்த்தி தர வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தோம். இதைத்தொடர்ந்து, கடந்த ஜனவரி மாதம் முதல் 4,140 ரூபாயாக சம்பளம் உயர்த்தப்பட்டது.
இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் பெரும்பாலான ஊராட்சிகளில் பம்ப் ஆபரேட்டர்களாக பணியாற்றி வருவோர்களுக்கு கடந்த ஓராண்டாக சம்பள பணம் வழங்கப்படவில்லை.
ஜோலார்பேட்டை ஒன்றியம், கூத்தாண்ட குப்பம் ஊராட்சியில் பம்ப் ஆபரேட்டர்களாக பணியாற்றி வரும் 10 பேருக்கு கடந்த ஓராண்டுக்கு மேலாக சம்பளம் வழங்கவில்லை. இது தொடர்பாக ஊராட்சிச்செயலாளர், அலுவலக எழுத்தர் ஆகியோரிடம் பலமுறை கேட்டும் நடவடிக்கை இல்லை. ஊராட்சிக்கு போதிய நிதி ஆதாரம் இல்லாததால் சம்பளம் வழங்க முடியவில்லை என பதில் அளிக்கின்றனர்.
எனவே, எங்களின் துயரத்தை போக்க நிலுவையில் உள்ள சம்பளத்தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் பல ஆண்டுகளாக வேலை செய்து வரும் பம்ப் ஆபரேட்டர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் எங்களுக்கு மாதாந்திர சம்பளத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
இம்மனுவை பெற்ற திட்ட இயக்குநர் செல்வராசு, இது தொடர்பாக ஆட்சியரிடம் கலந்து பேசி விரைவில் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT