கு.க. செய்த பெண் மீண்டும் கர்ப்பம் : அறுவை சிகிச்சையின்போது உயிரிழப்பு : புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பரபரப்பு

கு.க. செய்த பெண் மீண்டும் கர்ப்பம் : அறுவை சிகிச்சையின்போது உயிரிழப்பு :  புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில்  பரபரப்பு
Updated on
1 min read

புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் 3 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பக்கட்டுப்பாடு செய்யப்பட்ட பெண் மீண்டும் கர்ப்பமானார். இதையடுத்து அரசு மருத்துவமனையில் நேற்று சிசுவை அகற்ற அறுவை சிகிச்சை மேற்கொண்டபோது அந்தப் பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் மனைவி ராணி(28). இவர் கடந்த 2018-ல் பிரசவத்துக்காக புதுக்கோட்டை கைக்குறிச்சியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்திருந்தார். பின்னர் அவருக்கு புதுக்கோட்டை ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. ஏற்கெனவே, இவருக்கு ஒரு மகள் இருப்பதால் குடும்பக்கட்டுப்பாடும் செய்யப்பட்டது.

இந்நிலையில், கைக்குறிச்சியில் உள்ள பெற்றோர் வீட்டில் தங்கி இருந்த ராணிக்கு, கடந்த வாரம் வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து, புதுக்கோட்டை ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது, அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அறுவைச் சிகிச்சை மூலம் சிசுவை அகற்ற வேண்டும் எனவும் மருத்துவர்கள் கூறியதாக தெரிகிறது.

அதன்பின், நேற்று அதற்கான அறுவை சிகிச்சை செய்தபோது, எதிர்பாராதவிதமாக ராணி உயிரிழந்தார். பின்னர், அவரது உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதையறிந்த ராணியின் உறவினர்கள், மருத்துவர்களின் அலட்சியத்தால் தான் ராணி உயிரிழந்ததாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ஏற்கெனவே குடும்பக் கட்டுப்பாடு செய்த நிலையில் மீண்டும் ராணி கர்ப்பமடைந்ததால், அவருக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்த மருத்துவர்கள் மீதும், தற்போது அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளித்தனர். மேலும், இதற்கு உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே ராணியின் உடலை பெற்றுச்செல்வோம் என உறவினர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து மருத்துவக் கல்லூரி முதல்வர் மு.பூவதியிடம் கேட்டபோது, “இது குறித்து துறை ரீதியான விசாரணைக்கு உட்படுத்தி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in