

புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, சேலம் அருகே நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மக்கள் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கிராமங்களில் மக்கள் நாடாளுமன்ற கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் நேற்று (23-ம் தேதி) முதல் வரும் 27-ம் தேதி வரை 50 இடங்களில் மக்கள் நாடாளுமன்ற கூட்டம் நடத்தப்படுகிறது.
முதல் நிகழ்ச்சியாக சேலம் பனமரத்துப்பட்டி அடுத்த சின்ன கொண்டலாம்பட்டி மாரியம்மன் கோயில் மைதானத்தில் நேற்று மக்கள் நாடாளுமன்றக் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டசெயலாளர் மோகன் மக்களவை சபாநாயகராக செயல்பட்டார். வேளாண் துறை அமைச்சராக தினேஷ், மின்சாரத்துறை அமைச்சராக பாலன், எம்பிக்களாக பரமசிவம், செல்வராஜ், தனகோட்டி, பூபேஷ், காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஜெயபால், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி மாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவாதம் நடந்தது. மேலும், புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், தீர்மான நகலை, குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.