சேலம் அம்மாப்பேட்டையில் 3 மாதமாக - இயங்காத இ-சேவை மையத்தால் மக்கள் பாதிப்பு :

சேலம் அம்மாப்பேட்டையில் 3 மாதமாக  -  இயங்காத இ-சேவை  மையத்தால் மக்கள் பாதிப்பு :
Updated on
1 min read

சேலம் அம்மாப்பேட்டை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் இயங்கி வந்த இ-சேவை மையம் கடந்த மூன்று மாதமாக இயங்காததால், பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

சேலம் அம்மாப்பேட்டை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் இ-சேவை மையம் இயங்கி வந்தது. தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் பட்டாமாறுதல், வருமான சான்றிதழ், சாதிச் சான்றிதழ், முதியோர், ஆதரவற்றோர் உதவித் தொகை, திருமண நிதி உதவி திட்டம் உள்ளிட்ட பல்வேறு அரசின் சலுகை மற்றும் நலத்திட்ட உதவிகள், ஆவணங்களை பெற வேண்டி இ-சேவை மையத்தில் விண்ணப்பித்து வந்தனர்.

ஆனால், கடந்த மூன்று மாதமாக இ-சேவை மையம் மூடப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் பல்வேறு அரசு ஆவணங்கள், நலத்திட்ட உதவிகளுக்காக விண்ணப்பிக்க வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்று வருகின்றனர்.

எனவே, மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து, அம்மாப்பேட்டை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் இ-சேவை மையம் தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும், என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவன சேலம் மாவட்ட உதவி மேலாளர் நந்தகுமார் கூறும் போது, ‘கடந்த மூன்று மாதத்துக்கு முன்பு அம்மாப்பேட்டை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் இயங்கி வந்த இ-சேவை மையம் பணியாளர் இல்லாமல் மூடப்பட்டது. மீண்டும் அந்த இடத்தில் பணியாளர் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், விரைந்து இ-சேவை மையம் திறக்கப்படும்,’ என்றார்.

பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்து

ஒன்றரை ஆண்டாக நடக்கும் முதியவர்

சேலம் தாதம்பட்டி வஉசி நகரைச் சேர்ந்தவர் சண்முகம் (60). இவர் கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி பட்டா மாறுதல் வேண்டி ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்தில் விண்ணப்பித்துள்ளார். ஆனால், இ-சேவை மையத்தில் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்த நிலையில், சர்வேயர், கிராம நிர்வாக அதிகாரி, வருவாய் துறை அலுவலர்கள் என யாரும் கள ஆய்வு செய்து, சண்முகத்துக்கு பட்டா மாறுதல் வழங்கிட நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால், கடந்த ஒன்றரை ஆண்டாக இ-சேவை மையத்துக்கு வந்து, விண்ணப்பித்தின் தற்போதைய நிலையை ஆய்வு செய்யும் போதெல்லாம், சர்வேயர் கள ஆய்வுக்காக காத்திருப்பதாகவே தகவல் தெரிவிக்கிறது.

இ-சேவை மையம் வீட்டில் இருந்தே அனைத்து அரசு ஆவணங்களை பெறுவதற்கான எளிய வழி என்று ஆட்சியாளர்களும், அரசு உயர் அதிகாரிகளும் கூறி வந்தாலும், அதன்படி இல்லை என பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in