Published : 22 Aug 2021 03:15 AM
Last Updated : 22 Aug 2021 03:15 AM

ஓணம் பண்டிகை கொண்டாட்டம் - அத்தப்பூ கோலமிட்டு, ஊஞ்சல் ஆடி உற்சாகம் :

கேரளாவின் வசந்த விழாவான ஓணம் நேற்று கொண்டாடப்பட்டது. கரோனா கட்டுப்பாடுகளை தொடர்ந்து வீடுகளிலே சமூக இடைவெளியுடன் மக்கள் ஓணம் கொண்டாடினர். கேரளாவின் பக்கத்து மாவட்டமான கன்னியாகுமரியில் மலையாளமொழி பேசும் மக்கள் அதிகமானோர் உள்ளனர். இங்கும் ஓணம்பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும். இதையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்துக்கு நேற்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்தது.

நாகர்கோவில், கன்னியாகுமரி, தக்கலை, பத்மநாபபுரம், அருமனை, குலசேகரம், திற்பரப்பு, மார்த்தாண்டம், களியக்காவிளை, கருங்கல், குழித்துறை மற்றும்சுற்றுப்புற பகுதிகளில் அதிகாலையிலேயே புத்தாடை உடுத்தி கோயில்களில் சென்று வழிபட்ட பின்னர், மரபுப்படி ஓணம் பண்டிகையை மக்கள் கொண்டாடினர்.

உறவினர்கள், நண்பர்களை வீடுகளுக்கு அழைத்து சத்யா விருந்துவைத்து உபசரித்தனர். பெண்கள்,குழந்தைகள் அத்தப்பூ கோலமிட்டும், ஓணம் ஊஞ்சல் ஆடியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்து, திருவாதிரை நடனம் ஆடி உற்சாகமடைந்தனர். கோயில்களில் நேற்று திருவோண சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கன்னியாகுமரி,திற்பரப்பு, பத்மநாபபுரம் அரண்மனை உள்ளிட்ட சுற்றுலா மையங்களில் அனுமதி இல்லாததால், வழக்கமான ஓணம் உற்சாகம் நேற்று இல்லை.

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டத்தில் பணிநிமித்தமாக ஏராளமான கேரளமக்கள் வசிக்கிறார்கள். கரோனாபரவல் காரணமாக இவர்களில் பலரும் கேரளத்துக்கு செல்லவில்லை. தங்கள் இருப்பிடங்களிலேயே அவர்கள் ஓணம் கொண்டாடினர். இல்லங்களில் அத்தப்பூ கோலமிட்டும், கோயில்களுக்கு சென்று வழிபட்டும், மதியம் திருவோண சமையல் செய்து நண்பர்களுக்கு பரிமாறியும் கொண்டாடினர்.

கேரளத்தைச் சேர்ந்தவரான, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணுவின் முகாம் அலுவலக இல்லத்தில் அத்தப்பூ கோலமிடப்பட்டிருந்தது. அவருக்கு பலரும் ஓணம் பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x