

தூத்துக்குடியில் கதர் கிராமத் தொழில்கள் ஆணையம், கதர் கிராமத் தொழில்கள் வாரியம் மற்றும் மாவட்ட தொழில் மையம் சார்பில் பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. கதர் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் மதுரை கோட்ட இயக்குநர் ஆர்.பி.அசோகன் தலைமை வகித்து பேசியதாவது:
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சுய தொழில் தொடங்கி வாழ்க்கையில் முன்னேற்றம் அடையும் வகையில் பிரதம மந்திரியின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் மத்திய அரசு சார்பில் 35 சதவீத மானியத்தில் கடன் வழங்கப்படும்.
உற்பத்தி பிரிவு தொழிலுக்கு ரூ.25 லட்சம் வரையும், சேவைப்பிரிவு தொழிலுக்கு ரூ.10 லட்சம் வரையும் கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் இளைஞர்கள் கடனுதவிபெற்று தொழில் தொடங்கி வாழ்க்கையில் முன்னேற்றமடையலாம் என்றார் அவர்.
கதர் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் மதுரை அலுவலக உதவி இயக்குநர் ஆர்.வி.அன்புச்செழியன், மாவட்ட தொழில் மையத்தின் உதவி பொறியாளர் ராமச்சந்திரன், கதர் கிராமத்தொழில்கள் வாரியத்தின் தூத்துக்குடி உதவி இயக்குநர் எல்.சுதாகர், குறு, சிறு, நடுத்தர தொழில்கள் துறை உதவி இயக்குநர் ஜி.ஜெரினா பாபி, பாரத ஸ்டேட் வங்கியின் தூத்துக்குடி சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குநர் எம்.பொன்னையா, முன்னோடி வங்கி அலுவலக மேலாளர் விஜயகுமார் பங்கேற்றனர்.