

தூத்துக்குடி லயன்ஸ் டவுனைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஜஸ்டின். இவர் கடந்த மாதம் தூத்துக்குடியில் இருந்து தனது மூன்று சக்கர வாகனத்திலேயே சென்னை சென்று, திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏவை சந்தித்து மனு அளித்தார். அதில், “ வேலைவாய்ப்பு இல்லாத நிலையில், தூத்துக்குடியில் பழ ஜூஸ் கடை அமைப்பதற்கான ஏற்பாடு செய்து தரவேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ ஜஸ்டினுக்கு தூத்துக்குடி ராஜாஜி பூங்கா பகுதியில் பழ ஜூஸ் கடை அமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்து, கடையின் மாதிரி வடிவத்தை ஜஸ்டினிடம் வழங்கினார். மாநில இளைஞரணி துணைச் செயலாளர் எஸ்.ஜோயல் உடனிருந்தார்.
இதுகுறித்து, ஜஸ்டின் கூறும்போது, “ மாற்றுத் திறனாளியான நான் கம்ப்யூட்டர் டிசைனராக இருந்து வருகிறேன். வேலைவாய்ப்புகள் இல்லை. இதனால் வருமானம் இல்லாமல் பரிதவித்து வந்தேன். கடந்த மாதம் நான் தனியாகவே சென்னை சென்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏவை சந்தித்து மனு கொடுத்தேன். அவர் பழ ஜூஸ் கடை அமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்துகொடுத்துள்ளார். அவருக்கு நன்றி” என்றார்.