

75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டும், கரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் தூத்துக்குடியில் மாவட்டஆட்சியர் தலைமையில் அதிகாரிகள் 7.5 கி.மீ., தொலைவுக்கு விழிப்புணர்வு சைக்கிள் பயணம் மேற்கொண்டனர்.
தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் இந்திய கடலோர காவல் படை சார்பில் நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு சைக்கிள் மாரத்தான்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் சைக்கிள் பயணத்தை ஆட்சியர் கி.செந்தில் ராஜ்தொடங்கி வைத்து, பங்கேற்றார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், இந்தியகடலோர காவல் படை கமாண்டண்ட் அரவிந்த் சர்மா, தூத்துக்குடிமாநகராட்சி ஆணையர் சாரு, உதவி ஆட்சியர் (பயிற்சி) ஸ்ருதன் ஜெய் நாராயணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், கடலோர காவல் படையினர் இதில் கலந்து கொண்டு சைக்கிள் ஓட்டிச் சென்றனர். தெற்கு கடற்கரை சாலை வழியாக துறைமுக கடற்கரை வரை 7.5 கி.மீ. தொலைவுக்கு இந்த சைக்கிள் பயணம் நடைபெற்றது.