

சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலத்துக்கு உட்பட்ட சுவர்ணபுரி மாநகராட்சி தொடக்கப்பள்ளி வளாகத்தில் கரோனா தொற்று தடுப்பு விழிப்புணர்வு வாரத்தையொட்டி, சித்த மருத்துவத்தின் மூலம் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கக் கூடிய கபசுரக் குடிநீர், அமுக்கரா சூரண மாத்திரை வழங்கும் முகாம் நடந்தது. மாநராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் முகாமை தொடக்கி வைத்தார்.
மேலும், கடுக்காய் பொடி, சுக்குப் பொடி, துளசிப் பொடி, நெல்லிப் பொடி, சூரணம் ஆகியபொருட்கள் அடங்கிய பெட்டகமும் வழங்கப்பட்டது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வாசகம் அடங்கிய துண்டு பிரசுரமும் வழங்கப்பட்டது. சித்த மருத்துவத் துறையின் மூலம் வழங்கப்பட்டுள்ள வழிமுறைகளை பொதுமக்கள் தவறாமல் கடைபிடித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ள வேண்டும் என நிகழ்ச்சியில் அறிவுறுத்தப்பட்டது.
அதேபோல, நாடு முழுவதும் கடை பிடிக்கப்பட்டு வரும் உலகத் தாய்ப்பால் வாரவிழாவை முன்னிட்டு, சேலம் மாநகராட்சி ரெட்டியூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாய்ப்பாலின் மகத்துவத்தை பற்றி தாய்மார்களுக்கு எடுத்துரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் பாலூட்டும் தாய்மார்களுக்கும், குழந்தைக்களுக்கும் தேவையான சத்தான மருந்து மாத்திரைகள் அடங்கிய பெட்டகத்தை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாநகர நல அலுவலர் பார்த்திபன், மாவட்ட சித்த மருத்து அலுவலர் செல்வமூர்த்தி, உதவி ஆணையர் சரவணன், சித்த மருத்துவர்கள் வெற்றிவேந்தன், ராமு, சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.