Published : 06 Aug 2021 03:20 AM
Last Updated : 06 Aug 2021 03:20 AM

தமிழக விவசாயிகள் பயன்பெறும் வகையில் - ரேஷன் கடைகளில் சிறுதானியங்கள், தேங்காய் எண்ணெய் விற்பனை : விவசாய பட்ஜெட்டில் அறிவிக்கக் கோரிக்கை

ரேஷன் கடைகளில் இறக்குமதி செய்யப்பட்ட சமையல் எண்ணெய், பருப்புக்கு பதிலாக தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் மற்றும் ராகி, கம்பு, சோளம் என சிறு தானியங்களை விற்பனை செய்வது குறித்து விவசாயிகளுக்கான பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளர் நல்லசாமி கூறியதாவது:

விவசாயத்திற்கு என தனி பட்ஜெட் சமர்பிக்கப்படும் என்ற தமிழக அரசின் முடிவை வரவேற்கிறோம். பாராட்டுகிறோம். அதே நேரத்தில், இந்த பட்ஜெட் தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டத்தில் கட்சி சார்பில்லாத, விவசாய சங்கப் பிரதிநிதிகளையும் அழைக்காதது வருத்தமளிக்கிறது.

மொத்த மக்கள் தொகையில் 60 சதவீதம் விவசாயம் சார்ந்து இருக்கும் நிலையில், மொத்த வரவு செலவில், விவசாய பட்ஜெட்டிற்கு என எவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறது என்பது வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு சம்பளக் கமிஷன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது போல், எம்.எஸ். சுவாமிநாதன் கமிஷன் அறிக்கையை ஏற்று நடைமுறைப்படுத்த வேண்டும்.

ஈரோட்டைப் பொறுத்தவரை ஒருங்கிணைந்த மஞ்சள் வணிக வளாகம் அமைக்க வேண்டும். ஒரே இடத்தில் மஞ்சள் ஏலம் நடத்தும் வகையில், பெருந்துறை சிப்காட்டில், திமுக ஆட்சியில் திட்டம் தீட்டப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டது.

கிடப்பில் போடப்பட்ட அந்த திட்டத்தை நிறைவேற்றினால் விவசாயிகள் பலன் பெறுவர். பவானிசாகர் அணை நீர் நிர்வாகத்தை விருப்பு, வெறுப்பற்ற முறையில் நடத்த வேண்டும்.

ரேஷன் கடைகளில் இறக்குமதி செய்யப்பட்ட பாமாயில் விற்பனை செய்வதை நிறுத்தி, தமிழக விவசாயிகள் பலன் பெறும் வகையில் தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய் போன்றவற்றை விற்பனை செய்ய வேண்டும். அரிசி, கோதுமைக்கு பதிலாக, தமிழக விவசாயிகள் பயிரிடும் ராகி, கம்பு, சோளம், தினை, வரகு போன்ற சிறுதானியங்களை விற்பனை செய்ய வேண்டும்.

இறக்குமதி செய்யப்பட்ட பருப்பை கொடுக்காமல், தமிழகத்தில் விளையும் பருப்பை விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும்.

அஸ்கா எனும் வெண் சர்க்கரைக்கு பதிலாக நாட்டுச் சர்க்கரை, கருப்பட்டி, வெல்லம் விற்பனை செய்ய வேண்டும். இந்த விளை பொருட்களுக்கு மானியம் வழங்கினால், விவசாயிகளை நேரடியாக அந்த பலன் சென்றடையும்.

விவசாயி விளைவிக்கும் கரும்பை எங்கு வேண்டுமானாலும் விற்பனை செய்யலாம் என்ற தளர்வினை ஏற்படுத்த வேண்டும்.

அண்டை மாநிலமான கேரளாவில், கரோனா பரவலின்போது அந்நிய மதுபானக் கடைகள் மூடப்பட்டன.

ஆனால், உணவுப்பொருளாக கருதப்படும் கள் விற்பனை செய்யும் கடைகள் மூடப்படவில்லை. இலங்கை, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் கள்ளினை பாட்டிலில் அடைத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன.

அதனை நாமும் பின்பற்றலாம். பனை, தென்னை விவசாயிகளை பாதுகாக்க கள் விற்பனையை அனுமதிக்க வேண்டும். கள் மது அல்ல. உணவு என்பதை தமிழக அரசு உணர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Sign up to receive our newsletter in your inbox every day!

 
x