தூத்துக்குடியில் கரோனா விழிப்புணர்வு சைக்கிள் பேரணி : அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்

தூத்துக்குடியில் கரோனா விழிப்புணர்வு சைக்கிள் பேரணி :  அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்
Updated on
1 min read

தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அதிகாரிகள் பங்கேற்ற கரோனா விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை அமைச்சர் பெ.கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.

கரோனா 3-வது அலை பரவலைத் தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 7 நாட்களுக்கு தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் 5-ம் நாளான நேற்று தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் கரோனா விழிப்புணர்வு சைக்கிள் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாநகராட்சி அலுவலகம் முன்பிருந்து சைக்கிள் பேரணியை தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பேரணியில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், மாநகராட்சி ஆணையர் தி.சாரு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சரவணன், மாவட்ட வன அலுவலர் அபிசேக் டோமர்,மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், உதவி ஆட்சியர்(பயிற்சி) ஸ்ருதன் ஜெய் நாராயணன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்று சைக்கிள் ஓட்டிச் சென்றனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன் பேசும்போது, ‘‘கரோனா தொற்று பரவலை தடுக்க பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். சானிடைஸர் பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் கரோனாவில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்’’ என்றார்.

பேரணி பாளையங்கோட்டை சாலை, மேற்கு பெரிய காட்டன் சாலை, கடற்கரை சாலை வழியாகமுத்துநகர் கடற்கரை வரை நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாநகராட்சி செயற்பொறியாளர் சேர்மக்கனி, நகர்நல அலுவலர் வித்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in