

ஈரோடு கருங்கல் பாளையம் வி.ஜி.பி நகர் பகுதியைச் சேர்ந்தவர் மதிவாணன் (40). நிதி நிறுவனம் நடத்தி வந்தார். அதிமுக பிரமுகரான இவர், தீபா பேரவையில் மாவட்ட இணைச் செயலாளராக பதவி வகித்து வந்தார். அதன் பின்னர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது அதிமுகவில் இணைந்தார். ஈரோடு ராமமூர்த்தி நகர் பகுதியில், மதிவாணன் இ-சேவை மையம் நடத்தி வந்தார்.
இ-சேவை மையத்தின் முன்பு, நேற்று முன்தினம் இரவு மதிவாணன் அமர்ந்து இருந்தபோது, அங்கு வந்த நான்கு பேர் கொண்ட கும்பல், அரிவாளால் மதிவாணனை வெட்டி தலையைத் துண்டித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பினர். அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில், கருங்கல்பாளையம் போலீஸார் அங்கு வந்து விசாரணை யைத் தொடங்கினர். மதிவாணன் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, அனுப்பி வைத்தனர்.
கொலையாளிகளைப் பிடிக்க மாவட்ட எஸ்பி சசிமோகன் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர்கள் பன்னீர்செல்வம், ஜெயமுருகன், விஜயா, கோபி ஆகியோர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக் கப்பட்டுள்ளன. மேலும் கொலை நடந்த இடத்தில் உள்ள சிசி டிவி கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டு போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.