

திருச்செங்கோட்டில் கொங்கு இளைஞர் சங்கம், கொங்கு வேளாளர் பேரவை, கொங்கு வேளாளர் சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியவற்றின் சார்பில் தீரன் சின்னமலையின் 116-வது நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.
கூட்டத்தில் பங்கேற்ற கொங்கு வேளாளர் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகி பொன். கோவிந்தராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சுதந்திரப் போராட்ட தியாகிகளில் ஒருவரான தீரன் சின்னமலை உருவப்படம் சட்டப் பேரவையில் வைக்கவேண்டும். அவரது வாழ்க்கை வரலாறு தமிழ்நாடு அரசின் பாடப் புத்தகங்களில் இடம்பெறச் செய்ய வேண்டும்.
தீரன் சின்னமலை மணிமண்டபம் அமைந்துள்ள இடத்தில் தீரன் சின்னமலை குதிரையில் அமர்ந்திருப்பது போன்ற திருவுருவச் சிலையை வைக்க வேண்டும். மறைந்த தலைவர்களின் புகழ் பரப்ப ஒலி-ஒளி காட்சி அமைப்பதை போல் சங்ககிரி கோட்டை பகுதியில் தீரன் சின்னமலை வாழ்க்கை வரலாறு ஒலி - ஒளி காட்சி திரையிட ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். கொங்கு இளைஞர் சங்க நிர்வாகிகள் அனிதாவேலு, செந்தில் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.