

அந்தியூர் அருகே விளை நிலங்களில் யானை புகுந்து சேதம் ஏற்படுத்துவதைத் தடுக்க அகழி வெட்டித்தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த நல்லாகவுண்டன் கொட்டாய் கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இப்பகுதி விவசாயிகள் கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்களைப் பயிரிட்டுள்ளனர். நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றையானை, தோட்டத்திற்குள் புகுந்து கரும்பு மற்றும் வாழைப் பயிர்களை சேதப்படுத்தியது. இதையடுத்து அப்பகுதி விவசாயிகள் ஒன்று திரண்டு தீப்பந்தங்களுடன் சென்று யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
சேதமடைந்த பயிர்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள விவசாயிகள், யானைகள் விளை நிலங்களுக்குள் வராத வகையில், அகழிகளை வெட்டித்தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இதனிடையே, வனப்பகுதியை ஒட்டியுள்ள விளைநிலங்களில் யானைக்கு பிடித்தமான கரும்பு, வாழை போன்ற பயிர்களை பயிரிடுவதை விவசாயிகள் தவிர்க்க வேண்டும் என வன ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். வனப்பகுதியையொட்டி இப்பயிர்களைப் பயிரிடும் போது, யானைகள் அதனால் ஈர்க்கப்பட்டு, வனத்தை விட்டு வெளியேறுவதாகவும், இதனால் பொருட்சேதம் மட்டுமின்றி சில நேரங்களில் உயிர்சேதமும் ஏற்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.