

நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வீட்டுத் தனிமையில் உள்ளவர்களுக்கு ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரம் இலவசமாக வழங்கப்படுகிறது, என இந்திய செஞ்சிலுவை சங்க நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சி. ராஜேஸ்கண்ணன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
இந்திய செஞ்சிலுவை சங்கம், ரெட்கிராஸ் ஆக்சிஜன் வங்கி என்ற இலவச சேவையை வழங்குகிறது. நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வீட்டுத் தனிமையில் உள்ள நபர்களுக்கு ஆக்சிஜன் தேவைப்பட்டால் ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரம் விதிமுறைகளுக்கு உட்பட்டு இலவசமாக வழங்கப்படுகிறது.
இவை முன்பதிவின் அடிப்படையில் வழங்கப்படும். இதற்கு மருத்துவரின் பரிந்துரை கடிதம் அவசியமாகும். மேலும், திரும்பப் பெற்றுக் கொள்ளும் முன்தொகை ரூ.5000, இருப்பிட முகவரிச் சான்று, ஆதார் அட்டை ஆகியவற்றை வழங்கி 15 நாட்கள் வரை பயன்படுத்திக் கொள்ளலாம். இயந்திரம் சேதப்படுத்தினால் மட்டும் உரிய தொகை செலுத்த வேண்டும். விண்ணப்பம் செய்பவர்களுக்கு 10 லிட்டர் அளவுள்ள ஆக்சிஜன் செறிவூட்டி வழங்கப்படும், என்றார்.