காவிரியில் தமிழகத்துக்குரிய தண்ணீரை கர்நாடகத்திடம் கேட்டுப் பெற வேண்டும் : தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

காவிரியில் தமிழகத்துக்குரிய தண்ணீரை கர்நாடகத்திடம் கேட்டுப் பெற வேண்டும்  :  தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
Updated on
1 min read

தமிழகத்துக்கு தர வேண்டிய காவிரி நீரை கர்நாடக அரசிடம் காலம் தாழ்த்தாமல் உடனடியாக கேட்டுப் பெற வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் சாமி.நடராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று தெரிவித்துள்ளது: கர்நாடக அரசு காவிரியில், ஜூன் மாதத்துக்கு 9.19 டிஎம்சி, ஜூலை மாதத்துக்கு 31.24 என 40.43 டிஎம்சி நீர் தர வேண்டும். ஆனால், இதுவரை 30.9 டிஎம்சி நீரை மட்டுமே கர்நாடக அரசு தந்துள்ளது. மீதம் 10.34 டிஎம்சி நீர் தர வேண்டியுள்ளது.

தற்போது காவிரி டெல்டா பகுதியில் குறுவை சாகுபடி நடவு பணிகள் நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து, சம்பா சாகுபடி பணியை தொடங்க வேண்டியுள்ளது. தற்போது, டெல்டா பகுதிக்கு தண்ணீர் தேவை அதிகம் உள்ளது. இந்த சூழ்நிலையில் கர்நாடக அரசு நமக்கு தர வேண்டிய தண்ணீரை ஒருவார காலத்துக்குள் தரவேண்டும். இதற்கு தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி ஆணையம், காவிரி ஒழுங்காற்று குழு ஆகியவற்றுக்கு கடிதம் எழுதி, நமக்கான உரிமையை பெற்றுத் தர வேண்டும்.

தற்போது கர்நாடகத்தில் நல்ல மழை பெய்து, அணைகளில் போதியளவு தண்ணீர் இருப்பு உள்ளது. இந்த சூழ்நிலையில் தமிழகத்துக்கு கடந்த 2 மாதங்கள் தரவேண்டிய தண்ணீரில் மீதம் இருக்கும் அளவை உடனடியாக வழங்க வேண்டும். இந்த தண்ணீரையும் இரண்டொரு நாட்களில் தமிழகத்துக்கு கர்நாடகம் விடுவிக்க வேண்டும். அவ்வாறு விடுவித்தால் மட்டுமே தமிழகத்தில் குறுவை சாகுபடி, சம்பா சாகுபடிக்கு பயனுள்ளதாக இருக்கும்.

இதற்கான நடவடிக்கைகளை காவிரி நீர் ஒழுங்காற்று குழு, காவிரி ஆணையம் எடுக்க வேண்டும். இதுகுறித்து முதல்வரும், கர்நாடகத்திடம் பேசி நமக்குரிய தண்ணீரை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in