Published : 03 Aug 2021 03:17 AM
Last Updated : 03 Aug 2021 03:17 AM

கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட நிலையில் நிறுத்தம் - பணி நிரந்தரம் கோரி தற்காலிக செவிலியர்கள் மனு :

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வந்த தற்காலிக செவிலியர்கள் சுமார் 20 பேர் ஆட்சியர் அலுவலகம் வந்துஅளித்த மனு விவரம்:

தூத்துக்குடி மாவட்டத்தில் தற்காலிக செவிலியர்கள் சுமார் 200 பேர் நியமிக்கப்பட்டு, கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வந்தோம். கடந்த 15-ம் தேதி முதல் எங்களை பணியில் இருந்து நிறுத்திவிட்டனர். நிரந்தர பணி வாய்ப்பு வழங்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

115 சமூகங்களின் சமூக நீதி கூட்டமைப்பு சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், “ ஒரு சாதிக்கு மட்டும் 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதால், பிற சமூகத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, 115 சமூகங்களின் கல்வி, வேலைவாய்ப்பு உரிமையை பறிக்கும்வகையிலான இந்த நடவடிக்கையை மறுபரிசீலனை செய்யவேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் இந்திய பார்வர்டு பிளாக் கட்சி மேற்கு மாவட்ட பொதுச் செயலாளர் செல்வம் தலைமையில் அளிக்கப்பட்ட மனுவில், “தமிழகத்தில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் அரசாணையை திரும்ப பெற வேண்டும். சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தி, இடஒதுக்கீடு வழங்கி சமூக நீதியை காக்கவேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பக்கிள் ஓடை சேதம்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி செயலாளர் கிதர் பிஸ்மி தலைமையில் அளிக்கப்பட்ட மனுவில், “தூத்துக்குடி பக்கிள் ஓடை பழுதடைந்த நிலையில் உள்ளது. ஓடையின் இரு புறங்களிலும் உள்ள சுவர்களின் சிமென்ட் பூச்சு உதிர்ந்து, ஜல்லி கற்களும், கம்பிகளும் வெளியில் தெரியும் வகையில் பலவீனமாக உள்ளது. சீரமைக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் டாக்டர் அம்பேத்கர் சிலை அமைப்பு மற்றும் பராமரிப்பு சங்கத் தலைவர் முரசு தமிழப்பன் தலைமையில் அளிக்கப்பட்ட மனுவில், “ திருச்செந்தூர் அம்பேத்கர் நினைவு பூங்காவில் காமராஜர் சிலை அருகே தமிழக அரசின் செலவில் அம்பேத்கர் வெண்கல சிலை அமைக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சியினர் அளித்த மனுவில், “வரும் 15-ம் தேதி அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். கூட்டத்துக்கு 7 நாட்களுக்கு முன்பாக அழைப்பு தரவேண்டும். கிராம சபை கூட்டத்தை வீடியோ எடுத்து ஆவணப்படுத்த வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டம்

தமிழ் புலிகள் கட்சியினர் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்டச் செயலாளர் தாசு தலைமை வகித்தார். சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக தூத்துக்குடி செல்வநாயகபுரம் டி.எம்.சி காலனியில் குடியிருந்து வரும் 300 குடும்பங்களுக்கு அங்கேயே இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்” என வலியுறுத்தினர்.

தூத்துக்குடி திரவியபுரம் சேகர திருச்சபை உறுப்பினர் ஜெபக்குமார் கொடுத்த மனுவில், “தென்னிந்திய திருச்சபையின் தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல தேர்தல் வரும் 15-ம் தேதி முதல் அக்டோபர் 21-ம் தேதி வரை நடைபெறுகிறது. தேர்தலை பொது ஊரடங்கு முடியும் வரை ஒத்திவைக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x