Published : 03 Aug 2021 03:17 AM
Last Updated : 03 Aug 2021 03:17 AM

கரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த - வாகன கலைப்பயண பிரச்சாரம் நாகர்கோவிலில் தொடக்கம் :

நாகர்கோவில்

குமரி மாவட்டத்தில் கரோனா பரவல்மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், நாகர்கோவிலில் கரோனா விழிப்புணர்வு வாகன கலைப் பயண பிரச்சாரத்தை மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் நேற்று தொடங்கி வைத்தார்.

கன்னியாகுமரி மாவட்ட பொது சுகாதாரத்துறை சார்பில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை கலைப் பயண பிரச்சாரம் 4 நாள் நடைபெறுகிறது. இந்த பிரச்சார வாகனத்தை குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆட்சியர் மா. அரவிநத் தொடங்கி வைத் தார்.

பின்னர் அவர் கூறியதாவது:

கரோனா 3-வது அலையை தடுக்கும் விதத்தில் அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பதே கலைப் பயண விழிப்புணர்வு வாகன பிரச்சாரத்தின் முக்கிய நோக்கமாகும். தடுப்பூசி முகாம்களுக்கு பொதுமக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

குமரியில் இதுவரை 8,000 கர்ப்பிணி, பாலூட்டும் தாய்மார்கள் கரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளனர். மீதமுள்ள கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களும் தடுப்பூசி செலுத்திகொள்ள முன்வரவேண்டும். மாற்றுத்திறனாளிகள், முதியவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கரோனா தடுப்பூசி வழங்கப்படுகிறது.

கரோனா தடுப்பு முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து கடைபிடித்தால் தான் 3-வது அலையை தவிர்க்க முடியும் என்றார்.

நிகழ்ச்சியில் எபிகோர் அமைப்பு சார்பில் 5 ஆயிரம் முகக் கவசங்கள் வழங்கப்பட்டன. கலைமாமணி பழனியாபிள்ளை தலைமையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றன.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி, கோட்டாறு அரசு ஆயுர்வேத மருத்துவகல்லூரி மருத்துவமனை முதல்வர் கிளாரன்ஸ் டேவி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x