Published : 01 Aug 2021 06:31 AM
Last Updated : 01 Aug 2021 06:31 AM

இணையவழியில் போட்டித் தேர்வுகளைநடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு :

போட்டித் தேர்வுகளை இணையவழியில் நடத்துவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

தமிழகத்தில் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித் துறைகளில் உள்ள காலிபணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் (டிஆர்பி)போட்டித்தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. இதற்கிடையே கரோனா பரவல், நீதிமன்ற வழக்குகள் உட்பட பல்வேறு காரணங்களால் ஓராண்டுக்கும் மேலாக டிஆர்பி தேர்வுகள் எதுவும் நடைபெறவில்லை.

இந்நிலையில். கரோனா பரவலால் தள்ளிவைக்கப்பட்ட தேர்வுகளை இணையவழியில் நடத்த ஆசிரியர் தேர்வுவாரியம் முடிவு செய்துள்ளது. இதற்காக அரசுக் கல்லூரிகளில் தேர்வு மையங்கள் அமைப்பதற்கான பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து கல்லூரிக்கல்வி இயக்குநர் சி.பூர்ண சந்திரன், அனைத்து அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்:

ஆசிரியர் தேர்வு வாரியம், என்எஸ்இஐடி நிறுவனத்துடன் இணைந்து செப்டம்பர் முதல் நவம்பர் மாதம் வரை இணையவழியில் தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த தேர்வுகளை அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள கணினி ஆய்வகங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு ஏதுவாக அனைத்து கல்லூரி முதல்வர்கள் தங்கள் வளாகத்தில் உள்ள கட்டமைப்பு வசதிகள், பணியாளர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்க வேண்டும். அதன் அடிப்படையில் கல்லூரிகள் தேர்வு மையங்களாக பயன்படுத்திக் கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து ஆசிரியர் தகுதித்தேர்வு, பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு உட்பட தேர்வுகளுக்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x