Published : 01 Aug 2021 06:31 AM
Last Updated : 01 Aug 2021 06:31 AM

வருவாய் இழப்பு இல்லாத பெற்றோர்களிடம் - தனியார் பள்ளிகள் 85% கட்டணத்தை 6 தவணையில் வசூலிக்கலாம் : உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை

நடப்பு கல்வி ஆண்டில், வருவாய் இழப்பு இல்லாத பெற்றோரிடம் தனியார் பள்ளிகள் 85 சதவீத கல்விக் கட்டணத்தை 6 தவணைகளில் வசூலித்துக் கொள்ளலாம் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், மாணவர்களிடம் கல்விக் கட்டணம் வசூலிக்க தனியார் பள்ளிகளுக்கு தடைவிதித்து கடந்த ஆண்டு தமிழக அரசு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கடந்த ஆண்டு 75 சதவீத கட்டணத்தை இரு தவணைகளாக முறையே 40 மற்றும் 35 சதவீதம் என பிரித்து வசூலித்துக் கொள்ள அனுமதியளித்து இருந்தது.

ஆனால், இந்த உத்தரவை மீறி பல பள்ளிகளில் 100 சதவீத கட்டணம் வசூலிப்பதாக பெற்றோர் தரப்பிலும்குற்றம்சாட்டி வழக்குகள் தொடரப்பட்டன. இந்நிலையில், இது தொடர்பான வழக்குகள் மீதான விசாரணை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் முன்பாக நடைபெற்றது.

உச்ச நீதிமன்ற உத்தரவுபடி, நடப்பு கல்வி ஆண்டில் 85 சதவீதத்தை கல்விக் கட்டணமாக வசூலிக்க அனுமதிக்க வேண்டும் என்று தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், வாதிடப்பட்டது.

அரசுத் தரப்பில் அதற்கு மறுப்புப் தெரிவித்து, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த 85 சதவீத கல்விக் கட்டணம் என்பது தமிழகத்துக்குப் பொருந்தாது எனவும், ராஜஸ்தானுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், எனவே முந்தைய கல்வியாண்டு போலவே தமிழகத்தில் தற்போதும் 75 சதவீத கட்டணத்தை 2 தவணைகளாக வசூலிக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது எனவும் வாதிடப்பட்டது.

இதையடுத்து நீதிபதி டி.கிருஷ்ணகுமார் இது தொடர்பாக விரிவாக பிறப்பித்துள்ள தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

நடப்பு கல்வி ஆண்டிலும் (2021-22) பள்ளிகள் திறப்பு என்பது சாத்தியமில்லாததாக உள்ளது. இந்த சூழலில் வகுப்புகளும், தேர்வுகளும் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்று வருகின்றன. பல பெற்றோர் கடந்த ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தைக்கூட இன்னும் செலுத்தவில்லை என்பது நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.

அதேபோல, தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கான சம்பளம் உள்ளிட்ட இதர நிர்வாகச் செலவுகளையும் கவனத்தில்கொள்ள வேண்டியுள்ளது. எனவே, வருவாய் இழப்பு ஏற்படாத, அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றுவோர், தொழிலதிபர்கள் மற்றும் முக்கியப் பணி வகிக்கும் பெற்றோரிடம் 85 சதவீத கல்விக் கட்டணத்தை, 6 தவணைகளாக வரும் 1.2.2022-க்குள் தனியார் பள்ளிகள் வசூலித்துக் கொள்ளலாம்.

கரோனா ஊரடங்கால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ள பெற்றோர், பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டால், அவர்களிடம் 75 சதவீத கட்டணத்தை மட்டும்6 தவணைகளாக வசூலிக்க வேண்டும். அதேபோல, வேலைவாய்ப்பின்மை காரணமாக கட்டணமே செலுத்த முடியாத நிலையில் உள்ள பெற்றோர், கூடுதல் கட்டணச் சலுகை கோரிபள்ளிகளை அணுகினால், அவர்களது கோரிக்கைகளை பள்ளி நிர்வாகம் பரிசீலிக்க வேண்டும்.

கட்டணம் செலுத்தாத மாணவர்களின் தேர்வு முடிவுகளை நிறுத்திவைக்கும் பள்ளிகளுக்கு எதிராக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த கட்டணச் சலுகை தொடர்பாக பெற்றோருக்கும், பள்ளி நிர்வாகத்துக்கும் இடையே பிரச்சினை எழுந்தால், மாவட்ட கல்வி அதிகாரிக்கு மனு அளிக்கலாம். அந்த மனுவை மாவட்ட கல்வி அதிகாரி 30 நாட்களில் பரிசீலித்து, தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

கட்டணம் செலுத்தாத மாணவர்கள் பள்ளிகளில் இருந்து நீக்கப்படவில்லை என்பதை பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.

தனியார் பள்ளி மாணவர்கள் குறிப்பிட்ட பள்ளியில் படிப்பைத் தொடர விரும்பாவிட்டால், அருகில் உள்ள அரசுப் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல, சிபிஎஸ்இ பள்ளிகள் தங்களுடைய 2021-22-ம் கல்வி ஆண்டுக்கான கட்டண விவரங்களை இணையதளத்தில் 4 வாரங்களில் வெளியிட வேண்டும்.

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீத ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணத்தை சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு வழங்குவது குறித்து தமிழக அரசும் பரிசீலிக்க வேண்டும். கல்விக் கட்டண நிர்ணயக் குழுவில் உள்ள காலியிடங்களை அரசு 8 வாரங்களில் நிரப்ப வேண்டும். 85 சதவீதத்தை கட்டணமாக வசூலிக்க அனுமதியளிக்கும் வகையில் திருத்தியமைக்கப்பட்ட சுற்றறிக்கையை அரசுபிறப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டு இது தொடர்பான வழக்கு களை நீதிபதி முடித்துவைத்துள்ளார்.

தனியார் பள்ளி மாணவர்கள் குறிப்பிட்ட பள்ளியில் படிப்பைத் தொடர விரும்பாவிட்டால், அருகில் உள்ள அரசுப் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x