Published : 30 Jul 2021 03:17 AM
Last Updated : 30 Jul 2021 03:17 AM

ஆந்திராவில் கடத்தப்பட்ட தொழிலதிபர் ஆற்காடு அருகே மீட்பு; இருவர் சிக்கினர் :

ரூ. 40 லட்சம் கடன் தொகையை வசூலிக்க ஆந்திர மாநில தொழி லதிபரை சொகுசு காரில் கடத்திய கும்பலை ஆற்காடு அருகே காவல் துறையினர் மடக்கிப் பிடித்தனர்.

ஆந்திர மாநிலம் நெல்லூரை அடுத்த அல்லூர்மண்டலைச் சேர்ந்த தொழிலதிபர் வெங்கடராஜூலு (32). இவர், வியாபாரத்துக்காக ஈரோட்டைச் சேர்ந்த மோகன் என்ற பைனான்சியரிடம் ரூ.25 லட்சம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. அசல் மற்றும் வட்டி என ரூ.40 லட்சம் தொகையை உரிய காலத்தில் திருப்பிக் கொடுக்காமல் வெங்கடராஜூலு ஏமாற்றி வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், ஆந்திர மாநிலம் ஓங்கோல் பகுதியில் இருந்து வெங்கடராஜூலு கடந்த 26-ம் தேதி மோகனின் ஆட்களால் கடத்தப் பட்டார். பணத்தை கொடுத்துவிட்டு அவரை மீட்டுச் செல்லுமாறு அவரது குடும்பத்தினரிடம் மோகனின் ஆட்கள் கூறியுள்ளனர். கடந்த 2 நாட்களாக ஆந்திர மாநிலத்தின் பல்வேறு இடங்களில் சொகுசு காரில் வெங்கட ராஜூலுவை வைத்துக் கொண்டு சுற்றியுள்ளனர். ஆனால், பணத்தை கொடுத்துவிட்டு அவரை மீட்டுச் செல்லாமல் அவரது குடும்பத்தினர் காலம் கடத்தி வந்துள்ளனர்.

இதனால், கடத்தல் கும்பல் சித்தூர் வழியாக ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு நேற்று முன்தினம் வந்துள்ளனர். மேல்விஷாரம் அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையையொட்டி உள்ள தனியார் மருத்துவமனைக்கு அருகில் கடத்தல் கும்பல் காரில் சுற்றியுள்ளனர். பணத்தை கேட்டு வெங்கடராஜூலுவின் குடும்பத்தினருக்கு வாட்ஸ்-அப் மூலமாக இருப்பிட தகவலை அனுப்பியுள்ளனர். இதுகுறித்து அவரது உறவினர்கள் ஆற்காடு நகர காவல் நிலையத்துக்கு புகார் அளித்தனர். அதன்பேரில், விரைந்து சென்ற காவலர்கள் சொகுசு காரில் இருந்த வெங்கடராஜூலுவை மீட்டதுடன், அவரை கடத்தி வந்த 2 பேரை மடக்கிப்பிடித்தனர்.

விசாரணையில் கடத்தல் கும்பல் ஆம்பூரை அடுத்த பண்டாரபள்ளியைச் சேர்ந்த செல்வராஜ் (28), ஆற்காடு அடுத்த தென்நந்தியாலத்தைச் சேர்ந்த அருண் (34) என்பது தெரியவந்தது. இவர்கள் இருவரும் ஈரோடு பைனான்சியர் மோகன் கூறிய தன்பேரில், வெங்கடராஜூலுவை கடத்தியது தெரியவந்தது.

மேலும், வெங்கடராஜூலு கடத்தப்பட்டது குறித்து அவரது குடும்பத்தினர் யாரும் ஆந்திர மாநில காவல் துறையில் புகாரளிக்கவில்லை என்றும் விசாரணையில் தெரியவந்தது. பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட கடத்தல் என்பதாலும், வெங்கடராஜூலு கடத்தப்பட்டது ஆந்திர மாநிலம் என்பதால் இந்த வழக்கை அம்மாநில காவல் துறையினர் வசம் ஒப்படைக்க ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா நடவடிக்கை எடுத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x