

கரோனா தொற்றைத்தடுக்கும் பொருட்களை தயாரிக்கும் புதிய தொழில் முனைவோருக்கு 25 சதவீதம் மானியத்துடன் கடன் வழங்கப்படும் என ஈரோடு ஆட்சியர் கிருஷ்ணன் உண்ணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழக அரசின் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஐ.டி.ஐ. பட்டயபடிப்பு, இளங்கலை பட்டம் அல்லது அதற்கு மேற்பட்ட கல்வி தகுதி பெற்றவர்கள் தொழில் தொடங்க கடன் வழங்கப்படுகிறது. திட்ட மதிப்பீடு குறைந்த பட்சம் ரூ.10 லட்சத்திற்கு மேல் அதிகபட்சமாக ரூ.5 கோடி வரையிலான அனைத்து உற்பத்தி சார்ந்த் தொழில்கள் மற்றும் சேவை தொழில் துவங்கலாம். இத்திட்டத்தின்கீழ் தொழில் துவங்கும் தொழில் முனைவோருக்கு, திட்டமதிப்பீட்டில் 25 சதவீதம் அல்லது அதிக பட்சமாக ரூ.50 லட்சம் வரை முதலீட்டு மானியமும். தவணை தவறாமல் கடனை திருப்பி செலுத்தும் தொழில் முனைவோர்களுக்கு கூடுதல் சலுகையாக 3 சதவீதம் வட்டி மானியமும் அளிக்கப்படும்.
தொழில் தொடங்க வணிக வங்கிகள் அல்லது தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மூலம் கடனுதவி பெற பரிந்துரை செய்யப்படும்.
என்-95 முகக்கவசம், மருத்துவர்களுக்கான பி.பி. கிட் மற்றும் கிருமிநாசினி, வெப்பநிலையினை நிர்ணயம் செய்யும் கருவி. சோப்பு போன்ற பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும், நமது மாவட்டத்தில் தொழில் வாய்ப்புள்ள மதிப்புக் கூட்டப்பட்ட ஜவுளிப்பொருட்கள், நவீன மயமாக்கப்பட்ட ஆட்டோ லூம்கள், மதிப்புக் கூட்டப்பட்ட உணவுப் பொருட்கள், கயிறு தயாரித்தல் ஆகிய தொழில்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். தொழில் தொடங்க ஆர்வமுள்ள 21 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து, பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் இணைப்புகளுடன், ஈரோடு மாவட்டத் தொழில் மைய பொதுமேலாளரை அணுகலாம் எனத் தெரிவித்துள்ளார்.