

தூத்துக்குடியில் காவல் ஆய்வாளராக நடித்து ஆசிரியையிடம் 12 பவுன் தங்க நகைகளை பறித்து சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனியைச் சேர்ந்த சந்திரசேகர் மனைவி ஷீபா ஜோசப் (54). இவர் பண்ணைவிளையில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு கந்தசாமிபுரம் பிரதான சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளில் 2 நபர்கள் வந்தனர். அதில் ஒருவர் தன்னை காவல் துறை ஆய்வாளர் என்று கூறியுள்ளார். தங்க நகையை அணிந்து கொண்டு இதுபோன்று நடந்து செல்லக்கூடாது என, சரமாரியாக ஆங்கிலத்தில் எச்சரித்துள்ளார்.
அவர்களை உண்மையான போலீஸ் என்று நம்பிய ஷீபா ஜோசப், தான் அணிந்திருந்த 2 தங்க சங்கிலி, ஒரு ஜோடி வளையல் உள்ளிட்ட 12 பவுன் தங்க நகைகளையும் கழற்றி, தன்னுடைய கைப்பைக்குள் வைத்தார். சிறிது நேரம் கழித்து தனது பையில் இருந்த நகைகளை காணாமல் அதிர்ச்சியடைந்தார்.
தூத்துக்குடி வடபாகம் போலீஸார் நடத்திய விசார ணையில், மர்ம நபர்கள் குறித்த புகைப்படங்கள் கிடைத்துள்ளன. அதேபோன்று ஷீபா ஜோசப்புடன் சேர்த்து நிறுத்தி விசாரிக்கப்பட்ட மற்றொரு நபரும், வழிப்பறி கும்பலைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.