

கரோனா பெருந்தொற்றுப் பரவலால் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் மற்றும் கட்டுப்பாடுகளின் காரணத்தால், இரண்டாவது ஆண்டாகக் கல்வி நிறுவனங்கள் முறையாகச் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. இணைய வழி மூலம் மட்டுமே வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பெரும்பாலான பள்ளிகள் 100 சதவீத பள்ளிக் கட்டணத்தைச் செலுத்தக் கோரி பெற்றோரை வற்புறுத்துவதாக புகார்கள் எழுந்தன.
அவ்வாறு வற்புறுத்தும் பள்ளிகள் மீது புகார் தெரிவிக்கலாம் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது ‘‘நீலகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகள் நீதிமன்ற உத்தரவினை மீறி 100 சதவீத கட்டணத்தை செலுத்தக் கோரி கட்டாயப்படுத்தினால், குறிப்பிட்ட அந்தப் பள்ளிகள் மீது பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் புகார் தெரிவிக்கலாம். நீலகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் ceonilgirisfeescomplain@gmail.com என்ற தனி மின்னஞ்சல் முகவரி மூலம் புகாரை பதிவு செய்யலாம். புகார் வரும் கல்வி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.