Published : 01 Jul 2021 03:15 AM
Last Updated : 01 Jul 2021 03:15 AM
காரமடை மற்றும் பவானிசாகர் ஒன்றியத்தைச் சேர்ந்த 15 ஊராட்சி மக்கள் பயன்பெறும் வகையில், அத்திக்கடவு அவிநாசி திட்ட விரிவாக்கத்தைச் செயல்படுத்துவது தொடர்பாக தமிழக முதல்வரைச் சந்தித்து மனு அளிக்க ஒருங்கிணைப்புக் குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
பவானிசாகர் அணையை ஒட்டியுள்ள கோவை மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளஇலுப்பநத்தம், இரும்பறை, செங்கப்பள்ளி, முடுதுறை பவானிசாகர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மாதம் பாளையம், பனையம்பள்ளி, பெரியகள்ளிப்பட்டி, நல்லூர்,தேசிபாளையம், காராப்பாடி, காவிலிபாளையம், வரப்பாளை யம், விண்ணப்பள்ளி, நொச்சிக் குட்டை உள்ளிட்ட ஊராட்சிகளில் வறட்சி காரணமாக குளம், குட்டைகள் வறண்டு போயுள்ளன. இதனால், இப்பகுதியில் விவசாயம் பொய்த்ததோடு, குடிநீரின்றி 100-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் தவித்து வருகின்றனர். இந்த ஊராட்சிப்பகுதிகள் அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் சேர்க்கப்படவில்லை. பவானிசாகர் அணையின் அருகில் இருந்தும் இந்த கிராமத்தினர் நீர் கிடைக்காமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் பாதிக்கப் பட்ட 15 ஊராட்சிப் பகுதிகளில் உள்ள குளம், குட்டைகளுக்கு, பவானி ஆற்றில் இருந்து நீர் நிரப்பும் வகையில், சிறுமுகை காவிலிபாளையம் திட்டம் எனும் திட்டத்தை இப்பகுதி விவசாயிகள் முன்னெடுத்தனர். இது தொடர்பாக 15 ஊராட்சி மன்ற கிராம சபைக் கூட்டங்களில் தீர்மானம் நிறை வேற்றினர். முந்தைய அதிமுக அரசு, சிறுமுகை - காவிலிபாளையம் திட்டத்தை, அத்திக்கடவு அவிநாசி திட்டம் 2 எனும் பெயரிலேயே நிறைவேற்றி தருவதாக வாக்குறுதி அளித்துள்ளனர். அதன்படி, பொதுப்பணித்துறையினர் இத்திட்டம் குறித்து ஆய்வு செய்து மதிப்பீட்டு அறிக்கையை அரசிடம் சமர்பித்துள்ளனர். அதன் பின்னர் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பால் திட்டப் பணிகள் நடைபெறவில்லை. இதுகுறித்து 15 ஊராட்சிகளின் பிரமுகர்கள் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழுவினர் கூறியதாவது:
கடந்த ஆட்சியில் இந்த திட்டத்தை செயல்படுத்த மதிப்பீட்டு அறிக்கையை பொதுப்பணித்துறை தயாரித்துள்ளது. எம்பிக்கள் கனிமொழி, ஆ.ராசா, அமைச்சர் சு. முத்துசாமி உள்ளிட்டோரிடம் இது தொடர்பாக மனுக்களை அளித்துள்ளோம். பவானி ஆறு, பவானிசாகர் அணைக்கு அருகில் இருந்தும் 15 ஊராட்சிகள் நீரின்றி பாதிக்கப்பட்டு வருகின்றன. எனவே, இப்பகுதி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும், குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும், அத்திக்கடவு அவிநாசி திட்டம் 2 திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும். இது தொடர்பாக முதல்வரைச் சந்தித்து முறையிடவும் முடிவு செய்துள்ளோம் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT