Published : 01 Jul 2021 03:15 AM
Last Updated : 01 Jul 2021 03:15 AM

தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்தும் - கால்நடை மருத்துவம் படிக்க முடியாத ஈரோடு பழங்குடியின மாணவர் : முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்ல அமைச்சர் உறுதி

தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பெற்றும் கால்நடை மருத்துவம் பயில முடியாத பழங்குடியின மாணவர் சந்திரனின் குடும்பத்தினர்.

ஈரோடு

தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பெற்றும் கால்நடை மருத்துவக் கல்வி பயில முடியாத ஈரோடு பழங்குடியின மாணவர் சந்திரன் குறித்து, முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் உறுதி அளித்தார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த சுண்டைப்போடு கிராமத்தைச் சேர்ந்த உடுமுட்டி – பசுவி தம்பதிக்கு 11 குழந்தைகள். சோளகர் எனும் பழங்குடியினத்தைச் சேர்ந்த இவருக்கு 75 சென்ட் மானாவாரி நிலமும், 8 மாடுகளும் சொத்தாக உள்ளது. இக்குடும்பத்தில் ஐந்தாவதாகப் பிறந்த உ.சந்திரன் மட்டும் கோபி வைரவிழா மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 வகுப்பில், வேளாண்மைச் செயல்பாடுகள் என்ற தொழிற்பாடப்பிரிவில் 600-க்கு 444 மதிப்பெண் பெற்றுள்ளார். அதன்பின், இளம் அறிவியல் பட்டப்படிப்பில் சேர தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்திற்கும், கால்நடை மருத்துவப் படிப்பில் சேர தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக் கழகத்திற்கும் 2019-ல் விண்ணப்பித்துள்ளார்.

இதில், தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக் கழகம் வெளியிட்ட தொழிற்பாடப் பிரிவினருக்கான தரவரிசைப் பட்டியலில், இட ஒதுக்கீட்டுத் தரவரிசையில், பழங்குடியினப் பிரிவில் முதல் இடம் கிடைத்தது. ஆனால், கலந்தாய்வில் பங்கேற்க இவருக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை.

தரவரிசைப்பட்டியலில் முதலிடம் பெற்றும் இட ஒதுக்கீடு பின்பற்றப்படாததால், சந்திரனுக்கு கால்நடை மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. சென்னை உயர்நீதிமன்றம், தேசிய மனித உரிமை ஆணையம் என பல்வேறு இடங்களில் முறையிட்டும் சந்திரனின் கோரிக்கை ஏற்கப்படவில்லை.

இந்நிலையில் நேற்று ஈரோடு வந்திருந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜிடம், மாணவர் சந்திரன் மனு அளித்தார். அதில், தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக் கழகத்தில் இந்த ஆண்டு இடம் ஒதுக்கித்தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். மனுவைப் பெற்றுக்கொண்ட அமைச்சர், முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x