

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2 வயது பெண் குழந்தையின் தொண்டையில் சிக்கிய தங்க மோதிரத்தை மருத்துவர்கள் ரிஜிட் எண்டாஸ்கோபிக் மூலம் அகற்றினர்.
சிவகங்கை சண்முகராஜா தெருவைச் சேர்ந்த ராம்பிரசாத், நிரஞ்சனா தம்பதியின் 2 வயது பெண் குழந்தை மதிமாலா. கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது நிரஞ்சனா விரலில் இருந்து தவறி கீழே விழுந்த மோதிரத்தை குழந்தை விழுங்கிவிட்டது. மோதிரம் தொண்டையில் சிக்கிக் கொண்டது. இதனால் குழந்தை சாப்பிட முடியாமல் சிரமப்பட்டது.இதையடுத்து குழந்தையை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில் மூச்சுக்குழல், உணவுக்குழல் பிரியும் இடத்தில் மோதிரம் சிக்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து காது, மூக்கு, தொண்டை சிகிச்சைப் பிரிவுத் தலைவர் நாகசுப்ரமணியன், மயக்கவியல் துறைத் தலைவர் வைரவராஜன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் ரிஜிட் எண்டாஸ்கோபிக் மூலம் மோதிரத்தை வெளியில் எடுத்தனர்.
சிறப்பாக செயல்பட்ட மருத் துவர்களை கல்லூரி டீன் ரேவதி பாலன், மருத்துவமனை கண்கா ணிப்பாளர் பாலமுருகன், நிலைய மருத்துவ அலுவலர் ரபீக், உதவி அலுவலர் மிதுன் ஆகியோர் பாராட்டினர்.
இதுகுறித்து டீன் ரேவதி பாலன் கூறுகையில், ‘இரண்டு வயது குழந்தை என்பதால் மயக்க மருந்து கொடுப்பதில் சிரமம் இருந்தது. இருந்தபோதிலும் மருத்துவர்கள் முயற்சியால் மோதிரம் அகற்றப்பட்டது என்று கூறினார்.