

பருத்தியில் கூன் வண்டு தாக்குதல் தென்படுவதால், 50 சதவீதம் வரை மகசூல் பாதிப்பு ஏற்படும். எனவே, விவசாயிகள் முறையாக வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என கொங்கணாபுரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.
எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் ஒன்றியத்தில் விவசாயிகள் மானாவாரியில் பயிரிட்டுள்ள பருத்தி செடிகள் பூக்கும் தருணத்தில் வாடி காய்ந்து வருகிறது. இவ்வாறு காய்ந்த செடிகளை சேகரித்து சோதித்து பார்ததில் பருத்தியில் கூன் வண்டு தாக்குதல் இருப்பது தெரியவந்தது. இதை தடுக்கும் வழிமுறைகளை வேளாண் துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக கொங்கணா புரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சாகுல் அமீத் கூறியதாவது:
பருத்தியில் தண்டு கூன் வண்டின் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டது. கூன் வண்டின் பெண் பூச்சிகள் பருத்தி தண்டினை சற்று துளைத்து முட்டையிடும். முட்டையில் இருந்து வெளியே வரும் இளம் புழுக்கள் தண்டின் உட்புற திசுக்களை சேதப்படுத்துவதால், செடிகளின் வளர்ச்சி குன்றி வாடிவிடும்.
புழுக்களால் பாதிப்படைந்த செடிகளின் தண்டு பகுதிகள் வீங்கி வலுவிழந்து காணப்படும். வலுவிழந்த செடிகள் மெல்லிய காற்று வீசினாலும்முறிந்து வீழ்ந்து விடுகின்றன. இதனால், விவசாயிகளுக்கு 50 முதல் 60 சதவீதம் வரை மகசூல் இழப்பு ஏற்படும்.
எனவே, கூன் வண்டினால் தாக்கப்பட்ட செடிகளை வேருடன் பிடுங்கி, எரித்து விட வேண்டும். அறுவடை முடிந்தவுடன் அதன் கட்டைகளை பிடுங்கி சேகரித்து எரித்து விடுவதன் மூலம் கூன் வண்டினை கட்டுப்படுத்தலாம். விதைத்த 20-ம் நாள் ஏக்கருக்கு 10 கிலோ கார்போபியூரன் (குருணை மருந்து ) உடன் 40 கிலோ மணல் கலந்து இட்டு, நீர் பாய்ச்ச வேண்டும்.
மேலும் தாக்கம் அதிகமாக தெரிந்தால் ஒரு லிட்டர் தண்ணீரில் 2 மில்லி பிப்ரோனில் மற்றும் 1 மில்லி லாம்டா சைக்ளோதிரின் கலந்து, மண் ஈரமாக இருக்கும் போது தண்டினை சுற்றி ஊற்றி விட வேண்டும்.
இந்த மேலாண்மை முறைகளை கையாண்டு தண்டு கூன் வண்டு தாக்குதலை கட்டுப் படுத்தலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.