

ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் கரோனா தொற்றின் தாக்கம் வெகுவாகக் குறைந்து வருவதாக மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் தெரிவித்தார்.
ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் கரோனா தொற்றினைத் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. மாநகராட்சி சார்பில் நாள்தோறும் மூன்றாயிரம் பேருக்கும், தனியார் மருத்துவமனைகளில் ஆயிரம் பேர் என மொத்தம் நான்காயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. மாநகராட்சி பகுதியில் உள்ள 1.30 லட்சம் வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு கரோனா அறிகுறிகள் உள்ளதா என 1400 பேர் வீடு, வீடாகச் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.
இதில் அறிகுறி உள்ளவர் களுக்கு வீடுகளுக்கே சென்று கரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஒரே தெருவில் மூன்று வீடுகளுக்கு மேல் பாதிப்பு இருந்தால் அந்தத் தெரு தனிமைப்படுத்தப்பட்டு, தடுப்புகள் அமைத்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மாநகராட்சி பகுதியில் கரோனா தொற்று வெகுவாகக் குறைந்துள்ளது.
இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் கூறியதாவது
ஈரோடு மாநகராட்சியில் ஆரம்பகட்டத்தில் தினமும் 500 பேர் வரை கரோனா பாதிப்புக் குள்ளாகி வந்தனர். தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால், தற்போது பாதிப்பு 62 பேராக குறைந்துள்ளது. அதேபோல் 45 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த நிலையில், தற்போது இது 17 ஆக குறைந்துள்ளது என்றார்.