கரி மூட்டம் தொழில் காப்பாற்றப்படுமா? : வருவாயின்றி தொழிலாளர்கள் தவிப்பு
ஊரடங்கு காரணமாக கரி மூட்டம் தொழில் முடங்கி கிடப்பதால், தொழிலாளர்கள் வருவாயின்றி தவித்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம், புதூர், எட்டயபுரம், குளத்தூர், பசுவந்தனை பகுதிகளில் விவசாயம் பிரதானமாக உள்ளது. அதற்கு அடுத்து கரிமூட்டம் தொழில் உள்ளது. இப்பகுதிகளில் சீமைக் கருவேலம் மரங்கள் அதிகம் உள்ளதால், கரிமூட்டம் தொழில் அதிகம் நடைபெறுகிறது. விளாத்திகுளம், புதூர் பகுதிகளில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் கரிமூட்டம் தொழில் நடைபெறுகிறது. சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
இங்கு தூர்கரி, உருட்டுகரி, பக்கடா கரி, குச்சி கரி என பல்வேறுரகங்களில் மரக்கரி தயாரிக்கப்படுகிறது. 3.5 டன் விறகு போட்டு எரித்தால் ஒரு டன் கரி துண்டுகள் கிடைப்பதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். பாய்லர் பயன்படுத்தும் ஆலைகளுக்கு கரித்துண்டுகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. டெல்லி, மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு இங்கிருந்து கரித்துண்டுகள் செல்கின்றன.
கடந்த ஆண்டு கரோனா ஊரடங்கால் சுமார் 7 மாதம் கரிமூட்டம் தொழில் அடியாடு நின்றுபோனது. ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் மழை பெய்ததால் தொழிலை தொடங்க முடியவில்லை. இந்த வருடமும் கடந்த 2 மாதங்களாக ஊரடங்கால் கரிமூட்டம் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.
நலவாரியம் தேவை
வடமாநிலங்களுக்கு அனுப்பப்பட்ட கரித்துண்டு களுக்கான தொகை ஊரடங் கால் வந்து சேரவில்லை. கடந்த 2 ஆண்டுகளாக கடுமையான பாதிப்பு. கரி மூட்டம் போடும் தொழிலை தடையின்றி மேற்கொள்ள உற்பத்தியாளர்களுக்கு வங்கிகள் மூலம் வட்டியில்லா கடன் வழங்க வேண்டும். கரிமூட்டம் போடும் தொழிலாளர்களுக்கு தனியாக நலவாரியம் அமைக்க வேண்டும்” என்றார்.
