Published : 01 Jul 2021 03:18 AM
Last Updated : 01 Jul 2021 03:18 AM

ஆண் குழந்தையை விற்பனை செய்த வழக்கில் மேலும் 4 பெண்கள் கைது : தனிப்படையினருக்கு தி.மலை எஸ்பி., பாராட்டு

வந்தவாசி பகுதியை சேர்ந்த ஆண் குழந்தையை விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட பெண்களுடன் தனிப்படை காவலர்கள்.

திருவண்ணாமலை

வந்தவாசி பகுதியைச் சேர்ந்த தம்பதியின் ஆண் குழந்தையை விற்ற வழக்கில் தொடர்புடைய மேலும் நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினரை தி.மலை எஸ்பி பவன்குமார் ரெட்டி பாராட்டியுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தாழம்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த பவானி (29) என்பவர் கடந்த சில நாட்களுக்கு வந்தவாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனது கணவர் சரத்குமார் (27) மீது புகார் ஒன்றை கொடுத்தார். அதில், கணவர் சரத்குமார் தன்னை ஏமாற்றிவிட்டு வேறு ஒரு பெண்ணு டன் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக கூறியுள்ளார். மேலும், தனக்கு கடந்த ஜனவரி மாதம் பிறந்த ஆண் குழந்தையை கணவர் சரத்குமார் விற்றுவிட்டதாகவும் கூறியிருந்தார்.

இது தொடர்பாக சரத்குமாரை பிடித்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், குழந்தையை விற்பனை செய்ததில் தனது மனைவி பவானிக்கும், வந்தவாசி பகுதியைச் சேர்ந்த ஏழுமலை (49) என்பவருக்கும் தொடர்பு இருப்பதை கூறியுள்ளார். பின்னர், சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த ஜோதி (65) என்பவருக்கு ரூ.1.20 லட்சத்துக்கு குழந்தையை விற்ற தகவல் தெரியவந்தது.

இதையடுத்து, மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜலட்சுமி தலைமையிலான தனிப்படை காவலர்கள் அயான வரம் சென்று ஜோதியை கைது செய்து விசாரித்தபோது, தண்டை யார்பேட்டையைச் சேர்ந்த கலைவாணி (37) என்பவருக்கு குழந்தையை ரூ.1.60 லட்சத்துக்கு விற்றதாக கூறியுள்ளார்.

பின்னர், கலைவாணியை கைது செய்த போது அந்த குழந்தையை கொருக்குப்பேட்டையில் உள்ள அமலு (23) மற்றும் முனியம்மாள் (25) ஆகியோருக்கு ரூ.2 லட்சத்து 5 ஆயிரத்துக்கு விற்றதாக அவர் கூறியுள்ளனர்.

இதையடுத்து அமலுவை தேடிச் சென்றபோது அவர் இல்லாததால் முனியம்மாவை கைது செய்தனர். அந்த குழந்தையை தஞ்சாவூர் மாவட்டம் அருள்மொழிபேட்டை எனும் கிராமத்தில் உள்ள நதியா (30) என்பவரிடம் ரூ.2.60 லட்சத் துக்கும் விற்பனை செய்ததாக தெரிவித்தார்.

பின்னர், நதியாவையும் கைது செய்து விசாரித்தபோது, ஈரோட்டைச் சேர்ந்த நந்தினி என்பவரிடம் ரூ.3.50 லட்சத்துக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

தொடர்ந்து அதிக விலைக்கு அடுத்தத்த நபர்களுக்கு விற்கப்பட்ட குழந்தையைத் தேடி தனிப்படை காவலர்கள் ஈரோடு சென்று விசாரித்தனர். அங்கும் நந்தினி கைது செய்தபோது குழந்தை இல்லை. அவர் அந்த குழந்தையை கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த ஜானகி என்ற நர்கீஸ் ஜானு (35) என்பவருக்கு ரூ.3.70 லட்சத்துக்கு விற்பனை செய்ததை தெரிந்துகொண்டு அதிர்ச்சிய டைந்தனர்.

மனம் தளராத தனிப்படை காவலர்கள் கோபிசெட்டிபாளை யம் எஸ்.டி.என் பகுதிக்கு சென்றபோது ஜானகி வீட்டில் குழந்தை இருப்பதைப் பார்த்து மகிழ்ச்சியுடன் மீட்டனர். பின்னர், திருப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்களின் உதவியுடன் ஜானகியை கைது செய்து, முறைப்படி குழந்தையை மீட்ட காவல் துறையினர் கைது செய்யப்பட்ட 9 பேரையும் வந்தவாசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.பின்னர் குழந்தையை மாவட்ட குழந்தை கள் நலக்குழுவினரிடம் ஒப்படைத்து பராமரிக்க நடவடிக்கை எடுத் துள்ளனர்.

இந்நிலையில் ஆண் குழந்தை விற்பனை வழக்கில் சிறப்பாக செயல்பட்ட வந்தவாசி அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் ராஜலட்சுமி தலைமையிலான தனிப்படையினரை தி.மலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி பாராட்டியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x