

நீலகிரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தடுப்பு நடவடிக்கைகளால் கரோனா தொற்று குறைந்து வருகிறது என்று, வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம், உதகை தமிழகம் அரசு விருந்தினர் மாளிகையில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தென்மேற்குப் பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து, அனைத்துத் துறை அரசு அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம், வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள், ரெம்டெசிவர் மருந்துகிடைக்காமல் சிரமப்பட்டனர். தற்போது அரசின் நடவடிக்கையால், நோயாளிகளுக்குத் தேவையான மருந்து கிடைத்து வருகிறது.
தமிழகம் முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறையே இல்லாத அளவுக்கு பல நாடுகள் மற்றும் மாநிலங்களில் இருந்து அதிக அளவில் ஆக்சிஜன் வரவழைக்கப்பட்டுள்ளது. அனைத்து கரோனா சிகிச்சை மையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் தொற்றாளர்கள் தங்கி, சிகிச்சைபெற ஏதுவாக படுக்கை வசதிகள் உள்ளன.
நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 26,662 நபர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், 141 நபர்கள் உயிரிழந்துள்ளனர். நாள்தோறும் சுமார் 2,700 கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
2,474 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன, இதில் 1,435 படுக்கைகள் காலியாக உள்ளன. தொடர் நடவடிக்கையால் நீலகிரி மாவட்டத்தில் கரோனா தொற்று குறைந்து வருகிறது. தொற்றை முழுமையாக கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டியநடவடிக்கை குறித்து அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுவரை 2,26,822 நபர்களுக்குகரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு, மாவட்டத் தில் 456 நிவாரண முகாம்கள் தயார்நிலையில் உள்ளன.
42 மண்டல குழுக்கள் அமைக்கப் பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப் படுகின்றன. 2,529 முதன்மை தொடர்பாளர்களைக் கொண்டு, தாழ்வான பகுதிகள், நிலச்சரிவு ஏற்படும் பகுதிகள் மற்றும் மழைவெள்ளத்தினால் பாதிக்கக்கூடிய பகுதிகளை தொடர்ந்துகண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.