மகளிர் நலன், குடிநீர் விநியோகத்துக்கு முன்னுரிமை :  ராமநாதபுரம் புதிய ஆட்சியர் உறுதி

மகளிர் நலன், குடிநீர் விநியோகத்துக்கு முன்னுரிமை : ராமநாதபுரம் புதிய ஆட்சியர் உறுதி

Published on

கரோனா தடுப்பு நடவடிக்கை, மகளிர் நலன், குடிநீர் விநியோகம் ஆகிய பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என ராமநாதபுரம் புதிய ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சி யராக இருந்த தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக மாற்றப்பட்டார். தமிழ்நாடு குடிசைமாற்று வாரிய திட்ட இயக்குநராக இருந்த எஸ்.கோபால சுந்தரராஜ் ராமநாதபுரம் ஆட்சியராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். ஆனால் அவர் பொறுப்பேற்பதற்கு முன்பே தென்காசி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.

அதையடுத்து மாநில ஊரக வாழ்வாதார இயக்க (மகளிர் திட்டம்) திட்ட செயல் இயக் குநராக இருந்த ஜெ.யு.சந்திரகலா ராமநாதபுரம் ஆட்சி யராக மாற்றப்பட்டார். இவர் ராமநாதபுரம் மாவட்டத்தின் 24-வது ஆட்சியராகவும், 2-வது பெண் ஆட்சியராகவும் நேற்று பொறுப்பேற்றார்.

கர்நாடக மாநிலம் தேவங்கிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா, வேளாண் துறையில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். 2013-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்ச்சி பெற்று, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பயிற்சி உதவி ஆட்சியராகவும், வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் மற்றும் ஓசூரில் சார்-ஆட்சியராகவும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ் வாதார இயக்கத்தின் செயல் இயக்குநராகவும் பணியாற்றி யுள்ளார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மக்கள் நலத் திட்டங்கள் பொதுமக்களுக்கு முழுமையாகச் சென்றடையும் வகையில் பணிகள் செயல்படுத்தப்படும். கரோனா தடுப்பு நடவடிக்கைகள், குடிநீர் விநியோகம், பொது சுகாதாரம், மகளிர் நலன் சார்ந்த திட்டங்கள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும். விவசாயிகள் மற்றும் மீனவர்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கும் முக்கியத்துவம் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.

அதையடுத்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அவர் ஆய்வு செய்தார். மருத்துவ அதிகாரிகள், மருத்துவர்களிடம் கரோனா சிகிச்சை, நோயா ளிகளுக்கு உணவு வழங்குவது, குழந்தை மருத்துவம் ஆகி யவற்றை கேட்டறிந்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in