

கரோனா காலத்தில் கடன் தவணையை கேட்டு மகளிர் குழுவினர் மற்றும் பொதுமக்களுக்கு தனியார் நிதி நிறுவனங்கள் நெருக்கடி கொடுப்பதை தடுக்க தூத்துக்குடி மாவட்டத்தில் 18 சிறப்பு கண்காணிப்புக் குழுக்களை அமைத்து ஆட்சியர் கி.செந்தில் ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
கரோனா பெரும் தொற்று காலத்திலும் கடன் தவணைத் தொகை மற்றும் வட்டித் தொகையை செலுத்துமாறு மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் பொதுமக்களுக்கு தனியார் நிதி நிறுவனங்கள் மற்றும் நுண்நிதி நிறுவனங்கள் கடுமையான நெருக்கடிகளை கொடுத்து வருவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் கடந்த 7-ம் தேதிஅனைத்து மண்டல வங்கியாளர்கள், நுண்நிதி நிறுவனங்கள் மற்றும் தனியார் நிதி நிறுவன மேலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, கடன் தவணை கேட்டு எந்த நெருக்கடியும் கொடுக்கவில்லை என நிதி நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால், கடன் தவணையை கேட்டு நெருக்கடி கொடுப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டே இருக்கின்றன. இதனை தடுக்க தூத்துக்குடி மாவட்டத்தில் 18 சிறப்பு கண்காணிப்புக் குழுக்களை அமைத்து மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சியில் 4 மண்டலங்களுக்கும் தலா ஒரு குழு, கோவில்பட்டி நகராட்சி பகுதிக்கு ஒரு குழு, காயல்பட்டினம் நகராட்சி மற்றும் திருச்செந்தூர், உடன்குடி, கானம் பேரூராட்சிகள், திருச்செந்தூர் ஒன்றியத்துக்கு ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 18 கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த குழுக்களில் மகளிர் திட்ட அலுவலர்கள், வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினர் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவினர் தினம் தோறும் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று நுண்நிதி நிறுவனங்கள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் கடன்களை வசூல் செய்வது தொடர்பாக புகார்கள் வராத வண்ணம் கண்காணிக்க வேண்டும்.
நுண்நிதி நிறுவனங்கள் நேரடியாகவோ, தொலைபேசி மூலமாகவோ நெருக்கடி தருவது தெரிந்தவுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். நிதி நிறுவனங்கள் மூலம் கடன் பெறுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், குழுவினர் தங்கள் பகுதியில் மேற்கொண்ட நடவடிக்கைள் குறித்து உடனுக்குடன் மாவட்ட மகளிர் திட்ட அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும் என, அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.