தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் - பச்சிளம் குழந்தையின் கட்டை விரல் துண்டானது : செவிலியரின் அலட்சியத்தால் நடந்ததா என விசாரணை

தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில்  -  பச்சிளம் குழந்தையின் கட்டை விரல் துண்டானது :  செவிலியரின் அலட்சியத்தால் நடந்ததா என விசாரணை
Updated on
1 min read

தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில், செவிலியரின் அலட்சியத்தால், பிறந்த 14 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையின் கட்டை விரல் துண்டானதாக வெளியான தகவல் குறித்து உரிய விசாரணை நடத்த மருத்துவக் கல்லூரி முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

தஞ்சாவூர் அருகே உள்ள காட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன்(34). விவசாயக் கூலித் தொழிலாளி. இவரது மனைவி பிரியதர்ஷினி(20). கர்ப்பிணியாக இருந்த பிரியதர்ஷினிக்கு மே 25-ம் தேதி ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. குறை மாதத்தில் குழந்தை பிறந்ததால், அதற்கு வயிற்றில் கோளாறு இருந்தது. இதனால் குழந்தையின் இடது கையில் மருந்து ஏற்றும் சாதனம் (வென்பிளான்) வழியாக, குழந்தைக்கு ஊசி மருந்து வழங்கப்பட்டுள்ளது.

குழந்தையின் உடல்நிலை ஆரோக்கியமடைந்ததால், டிஸ்சார்ஜ் செய்வதற்கான ஏற்பாடுகள் நேற்று முன்தினம் நடைபெற்றன.

அப்போது, குழந்தையின் கையில் உள்ள வென்பிளானை அகற்றி எடுப்பதற்காக, செவிலியர் ஒருவர் கத்தரிக்கோலால் நறுக்கும்போது, குழந்தையின் கட்டை விரலும் துண்டாகியதாக கூறப்படுகிறது. இதையடுத்து குழந்தையின் கையில் மருத்துவர்கள் தையல் போட்டனர்.

செவிலியரின் கவனக்குறைவால் தனது குழந்தையின் கை விரல் துண்டானதால், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழந்தையின் தந்தை கணேசன் வலியுறுத்தினார்.

இதுதொடர்பாக தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரி முதல்வர் வ.ரவிக்குமார் செய்தியாளர்களிடம் கூறியது: குழந்தைக்கு ஏற்றப்பட்ட டிரிப் லைனை பிரிக்கும்போது, குழந்தை கையை அசைத்து இருக்கலாம். அதனால், பெருவிரலின் நுனிபாகம் துண்டாகிவிட்டது. எலும்பில் எந்தவித பாதிப்பும் இல்லை. சதை மட்டுமே துண்டிக்கப்பட்டு இருந்தது. இதனால், உடனே குழந்தைக்கு தையல் போடப்பட்டுள்ளது. பச்சிளம் குழந்தை என்பதால் துண்டான விரல் விரைவில் இணைந்துவிடும்.

இதுதொடர்பாக துறை ரீதியான விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட செவிலியர் மனஉளைச்சலால் தற்போது வேலைக்கு வரவில்லை. செவிலியர் வந்தவுடன், விசாரணை நடத்தப்பட்டு, தவறு இருந்தால், அவர் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in