

சேலம் இரும்பாலையில் அமைக்கப் பட்டுள்ள 1,000 ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட கரோனா சிகிச்சை மையத்தை நிர்வகிக்க 13 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் நிரம்பியது. தனியார் மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் வசதியுடன் சிகிச்சை கிடைக்காமல் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிரமத்துக்குள்ளாகினர்.
இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் கூடுதலாக ஆக்சிஜன் வசதி கொண்ட கரோனா சிகிச்சை மையத்தை அமைக்க அரசு நடவடிக்கை எடுத்தது. அதன்படி, சேலம் இரும்பாலையில் முதல்கட்டமாக ஆக்சிஜன் வசதி கொண்ட 500 படுக்கைகளுடன் கூடிய கரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு, அதை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மேலும், கூடுதலாக 500 படுக்கை வசதிகள் ஏற்படுத்த முதல்வர் உத்தரவிட்டார்.தற்போது, இங்கு ஆக்சிஜன் வசதியுடன் 500 படுக்கைகள் பயன் பாட்டுக்கு வந்த நிலையில், கூடுதலாக 500 படுக்கைகளை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இரும்பாலை கரோனா சிகிச்சை மையத்தை நிர்வகிப்பது தொடர்பாக சேலம் ஆட்சியர் கார்மேகம் தலைமையில் பேரிடர் மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், இரும்பாலை கரோனா சிகிச்சை மையத்தை நிர்வகிக்க 13 பேர் கொண்ட குழு அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி, சேலம் மண்டல டாஸ்மாக் மேலாளர், தமிழ்நாடு சாலை திட்டம் சேலம் திட்ட இயக்குநர் ஆகியோரை இணை தலைவர்களாகவும், சேலம் மாநகராட்சி நல அலுவலர், சேலம் அரசு மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர், மின்வாரிய செயற்பொறியாளர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்கள் (கட்டிடம், மருத்துவம், மின்சாரம்) உள்ளிட்ட 11 பேர் உறுப்பினராகவும் கொண்ட 13 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இரும்பாலை கரோனா சிகிச்சை மையத்துக்கு தேவையான வசதிகளை பெற்றுத் தருதல், கரோனா நிதியில் இருந்து சிகிச்சை மையத்துக்கு நிதியைப் பெறுதல் உள்ளிட்ட பணிகளை இக்குழுவினர் மேற்கொள்வார்கள்.